பலாத்காரம் இல்லை; ஆட்டோவில் இருந்து விழுந்து விட்டாள்: ஐ.ஐ.எம். மாணவியின் தந்தை பரபரப்பு பேட்டி

கைது செய்யப்பட்ட நபருக்கும், மகளுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என ஐ.ஐ.எம். கொல்கத்தாவின் மாணவி தந்தை கூறியுள்ளார்.;

Update:2025-07-12 19:12 IST

கொல்கத்தா,

ஐ.ஐ.எம். கொல்கத்தாவை சேர்ந்த மாணவி ஒருவர், ஆடவர் விடுதியில் வைத்து சக மாணவர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என அதிர்ச்சி தகவல் வெளியானது.

இதுபற்றி அந்த மாணவி அளித்த புகாரின் அடிப்படையிலான எப்.ஐ.ஆர். பதிவில், கவுன்சிலிங் ஒன்று நடைபெறுகிறது. இதற்காக விடுதிக்கு வரும்படி மாணவிக்கு அழைப்பு விடப்பட்டது. அப்போது, ஆடவர் விடுதிக்கு சென்ற அந்த மாணவிக்கு, மயக்க மருந்து கலந்த பானம் ஒன்று கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால், சுயநினைவு வந்த பின்னரே அவர் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார் என உணர்ந்துள்ளார் என எப்.ஐ.ஆர். பதிவை சுட்டிக்காட்டி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

இதனை தொடர்ந்து, அந்த மாணவரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு 19-ந்தேதி வரை போலீஸ் காவல் விதிக்கப்பட்டு உள்ளது. எனினும், அவரை வழக்கில் சிக்க வைத்துள்ளனர் என அவருடைய வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இந்நிலையில், அந்த மாணவியின் தந்தை செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, பலாத்கார சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. நேற்றிரவு 9.34 மணியளவில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில், ஆட்டோவில் இருந்து அவள் விழுந்து விட்டாள். இதனால், அவள் உணர்வை இழந்து விட்டாள் என தகவல் தெரிவிக்கப்பட்டது என்றார். இதன்பின்னர் எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையின் நரம்பியல் துறைக்கு அந்த மாணவி கொண்டு செல்லப்பட்டு உள்ளார். அதன்பின்பு, போலீசார் அவரை அழைத்து சென்றனர் என மாணவியின் தந்தை கூறியுள்ளார். பலாத்காரம் எதுவும் நடைபெறவில்லை என அவரிடம், அவருடைய மகள் கூறினார் என்றார்.

போலீசாரோ அவரிடம் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளனர். தொடர்ந்து அவர் கூறும்போது, மகளிடம் பேசியபோது ஒருவரும் சித்ரவதை செய்யவில்லை. தவறாக நடக்கவில்லை என கூறினாள்.

கைது செய்யப்பட்ட நபருக்கும், மகளுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவள் நன்றாக இருக்கிறாள். அவள் தூங்கி கொண்டிருக்கிறாள். அதனால், விரிவாக பேசவில்லை. எழுந்த பின்னர் அவளிடம் பேசுவேன் என மாணவியின் தந்தை கூறினார்.

உங்களுடைய மகள் மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளாரா? என்ற நிருபரின் கேள்விக்கு அவர் பதிலளித்து பேசும்போது, இல்லை. முழுவதும் நன்றாகவே இருக்கிறார் என கூறியுள்ளார். இதனால், வழக்கு விசாரணையில் திருப்பம் ஏற்பட்டு உள்ளது.

கொல்கத்தா நகரில் உள்ள தெற்கு கொல்கத்தா சட்ட கல்லூரியை சேர்ந்த மாணவி (வயது 24) ஒருவர், கல்லூரி வளாகத்தில் ஆளுங்கட்சி அரசியல் பிரமுகர் மற்றும் 2 மாணவர்களால் கடந்த ஜூன் மாதத்தில், மிரட்டி பலாத்காரம் செய்யப்பட்டார். இதேபோன்று, கடந்த ஆண்டு ஆர்.ஜி. கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஐ.ஐ.எம். கொல்கத்தா மாணவி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் வெளிவந்து மற்றொரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், மாணவியின் தந்தை அதனை மறுத்திருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்