இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட முதியவர் இறுதி சடங்கில் உயிரோடு எழுந்ததால் பரபரப்பு

மனிதநேய அடிப்படையில் தான் முதியவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கியதாக சம்பந்தப்பட்ட தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் கூறியுள்ளார்.;

Update:2025-06-15 06:29 IST

மும்பை,

மும்பையை அடுத்த உல்லாஸ்நகர் கேம்ப் நம்பர்-4 பகுதியை சேர்ந்தவர் அபிமன்யு தாய்டே (வயது65). இவர் புற்றுநோய்க்கு மும்பை ஜே.ஜே. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். நேற்று காலை முதியவரின் உடல்நிலை மோசமானது. உடனடியாக அவரது மகன் முதியவரை ஆட்டோவில் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

அங்கு முதியவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறினர். மேலும் முதியவர் இறந்து விட்டதாக சான்றிதழும் வழங்கினர்.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் முதியவரை வீட்டுக்கு கொண்டு வந்தனர். மேலும் இறுதி சடங்கிற்கான வேலைகளை தொடங்கினர். இந்தநிலையில் முதியவரின் இதயம் துடிப்பதை குடும்பத்தினர் கவனித்தனர். உடனடியாக அவர்கள் முதியவரை உல்லாஸ்நகரில் உள்ள மற்றொரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது முதியவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது. தற்போது அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே மனிதநேய அடிப்படையில் தான் முதியவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கியதாக சம்பந்தப்பட்ட தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "உயிருடன் இருந்தவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கியது தவறுதான். அவர் உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினர் கூறினர். எனவே மனிதநேய அடிப்படையில்தான் அவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்கினேன்" என்றார்.

உயிருடன் இருந்த நபரை இறந்து விட்டதாக டாக்டர் அறிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்