'மூன்றரை ஆண்டுகளில் 3 ரெயில்வே கிராசிங் விபத்துகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன' - மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்
தற்போது 11,096 ரெயில்வே லெவல் கிராசிங் கேட்டுகள் இன்டர்லாக் செய்யப்பட்டுள்ளதாக அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.;
Image Courtesy : PTI
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 3 ரெயில்வே கிராசிங் விபத்துகள் மட்டுமே நிகழ்ந்துள்ளதாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் கடலூரில் பள்ளி வாகனம் மீது ரெயில் மோதி ஏற்பட்ட விபத்து தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"கடந்த 8-ந்தேதி தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில், தெற்கு ரெயில்வே திருச்சிராப்பள்ளி கோட்டத்தின் விழுப்புரம்-மயிலாடுதுறை பிரிவு கேட் எண் 170-ல் பள்ளி வாகனம் மீது ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன. இந்த விபத்து குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகள் மற்றும் நடப்பு ஆண்டு ஜூலை 20-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் ரெயில்வே கேட் கிராசிங் பகுதிகளில் 3 விபத்துகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன. 2022-23 முதல் 2024-25 வரையிலான கடந்த மூன்று ஆண்டுகளில், ரெயில்வே கிராசிங் விபத்துகளில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு ரெயில்வே நிர்வாகம் மொத்தம் ரூ.16 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளது. கடலூர் ரெயில் விபத்து சம்பவத்தில், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.11 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது 11,096 ரெயில்வே லெவல் கிராசிங் கேட்டுகள் இன்டர்லாக்(Interlock) செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில், மொத்தம் உள்ள 1,255-ல் தற்போது வரை 1,053 ரெயில்வே லெவல் கிராசிங் கேட்டுகள் இன்டர்லாக் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மேலும் 72 லெவல் கிராசிங்குகளில் இன்டர்லாக் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
லெவல் கிராசிங் கேட்டை இன்டர்லாக் செய்வது என்பது ஒரு பாதுகாப்பு மெக்கானிசம் ஆகும். இது பாதை தெளிவாக இருக்கும்போதும், கேட் மூடப்பட்டு பூட்டப்பட்டிருக்கும்போதும் மட்டுமே ரெயில் செல்ல அனுமதி அளிக்க முடியும் என்பதை உறுதி செய்கிறது.
சாலை மேம்பாலம் மற்றும் சாலைக்குக் கீழ் செல்லும் பாலங்களை அமைப்பதன் மூலமோ அல்லது குறைந்த போக்குவரத்து நெரிசல் உள்ள கிராசிங்குகளை மூடுவதன் மூலமோ அல்லது சாலை போக்குவரத்தை திருப்பிவிடுவதன் மூலமோ, லெவல் கிராசிங்குகளை அகற்றலாம்.
கடலூரில் 92 லெவல் கிராசிங்குகள் உள்ளன, அவற்றில் 11 லெவல் கிராசிங்குகளை சாலை மேம்பாலம் மற்றும் சாலைக்குக் கீழ் செல்லும் பாலங்கள் மூலம் நீக்குவதற்கு அனுமதிக்கப்பட்டன. இருப்பினும், தமிழக அரசிடமிருந்து ஒப்புதல் பெறப்படாததால், 7 பாலங்களுக்கான பணிகளை மேற்கொள்ள முடியவில்லை."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.