ரியல் எஸ்டேட் ஏஜென்ட் கொலை: தலைமறைவாக இருந்த தம்பதி 16 ஆண்டுகளுக்குப்பின் கைது
கைது செய்யப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.;
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பை மாவட்டம் கிழக்கு நலசொபுரா பகுதியில் கடந்த ஏப்ரல் 2009ம் ஆண்டு ரியல் எஸ்டேட் ஏஜென்ட் ஒருவர் கொல்லப்பட்டார். பண விவகாரத்தில் நடந்த இந்த கொலையில் தர்மேந்திர ராமசங்கர் (வயது 54), அவரது மனைவி சோனு (வயது 50) உள்பட 4 பேருக்கு தொடர்பு இருந்தது. கொலையாளிகள் 4 பேரும் தலைமறைவான நிலையில் அவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த வழக்கில் கடந்த சில ஆண்டுகளுக்குமுன் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, இந்த வழக்கில் தலைமறைவான எஞ்சிய 3 பேரையும் போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், ரியல் எஸ்டேட் ஏஜென்ட் கொலை வழக்கில் 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ராமசங்கர், அவரது மனைவி சோனுவை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். தம்பதி மத்தியபிரதேசத்தின் இந்தூரில் வசித்து வந்துள்ளனர். இது குறித்து அறிந்த போலீசார், இந்தூர் விரைந்து சென்று தம்பதியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் மும்பை அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர், இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.