மனு மீது பான் மசாலா கறை; ஆத்திரமடைந்த அலகாபாத் கோர்ட்டு நீதிபதி
பான் மசாலா கறையுடன் மனுக்களை கொண்டு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி எச்சரித்தார்.;
லக்னோ,
பான் மசாலா கறையுடன் மனுக்களை கொண்டு வந்ததால் நீதிபதி ஆத்திரமடைந்த சம்பவம் அலகாபாத் ஐகோர்ட்டில் நிகழ்ந்துள்ளது. நீதிபதி ஸ்ரீபிரகாஷ் சிங் முன்பு விசாரணைக்காக மேஜையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 10 மனுக்களில் பான் மசாலா கறை இருந்ததாக கூறப்படுகிறது.
இதனைக் கண்டு அதிருப்தி அடைந்த நீதிபதி, மனுக்களை நீதிமன்ற மேஜைகள் மீது வைக்கும்போது தாள்களில் பான் மசாலா கறை இருப்பது மிகவும் அருவருப்பாக இருப்பதாகவும், இந்த செயல் மிகவும் கண்டனத்திற்குரியது என்றும் காட்டமாக விமர்சித்தார். இனிமேல் பான் மசாலா கறையுடன் மனுக்களை கொண்டு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி எச்சரித்தார்.
இந்த அசுத்தமான செயலை நிறுத்தாவிட்டால், மனுக்களை தொடுபவர்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும், எந்த வகையிலும் இதை சகித்துக் கொள்ள முடியாது எனவும் கண்டித்த நீதிபதி ஸ்ரீபிரகாஷ் சிங், இனி இதுபோல் பான் மசாலா கறையுடன் மனுக்கள் விசாரணைக்கு வந்தால் அவற்றை பதிவு செய்யக் கூடாது என கோர்ட்டு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.