ஒவ்வொரு தொடரிலும் நாடாளுமன்றத்தை முடக்குவது நல்லதல்ல - அமித்ஷா காட்டம்
நாடு விடுதலை பெற்றதில் இருந்து இந்தியாவின் ஜனநாயக மரபு சிறப்பாக உள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.;
புதுடெல்லி,
அனைத்து இந்திய சட்டசபை சபாநாயகர்கள் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. 2 நாள் நடைபெறும் இந்த மாநாட்டை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளை எதிர்க்கட்சிகள் முடக்குவது குறித்து காட்டமாக பேசினார். இது குறித்து அவர் கூறியதாவது:-
ஒரு ஜனநாயகத்தில் விவாதம் நிச்சயம் இருக்க வேண்டும். ஆனால் சிலரின் குறுகிய அரசியல் ஆதாயத்துக்காக நாடாளுமன்றமோ அல்லது சட்டசபைகளோ முடக்கப்படுவது நல்லதல்ல. நாடாளுமன்றத்தில் விவாதங்கள் குறைந்தால், தேச கட்டுமானத்தில் அதன் பங்களிப்பு பாதிக்கப்படுகிறது.எதிர்க்கட்சிகள் எப்போதும் நிதானமாக இருக்க வேண்டும். ஆனால் எதிர்ப்பு என்ற பெயரில் நாள்தோறுமோ அல்லது ஒவ்வொரு தொடரிலுமோ அவையை நடக்க அனுமதிக்காமல் இருப்பது நல்லது அல்ல.
நாடு அதைப்பற்றி சிந்திக்க வேண்டும், மக்கள் அது குறித்து யோசிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் அது குறித்து சிந்திக்க வேண்டும். விவாதம் இல்லாத நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகள் வெற்று கட்டிடங்களாக மட்டுமே இருக்கும்.மக்கள் பிரச்சினைகளை எழுப்புவதற்கு ஒரு பாரபட்சமற்ற தளத்தை வழங்க நாம் பாடுபட வேண்டும். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் வாதங்கள் பாரபட்சமற்றதாக இருக்க வேண்டும். அந்தந்த சபையின் விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி சபையின் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
மகாபாரதத்தில் அஸ்தினாபுரம் அரண்மனையில் திரவுபதிக்கு ஏற்பட்டதைப்போல, அவையின் கண்ணியம் எப்போதெல்லாம் சமரசத்துக்கு உள்ளாகிறதோ, அப்போது நாடு தீவிர விளைவுகளை சந்திக்கும்.நாடு விடுதலை பெற்றதில் இருந்து இந்தியாவின் ஜனநாயக மரபு சிறப்பாக உள்ளது. இங்கு ஜனநாயகம் மிகவும் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளது. ஜனநாயகம் மோசமடைந்துள்ள நாடுகளை போல இல்லாமல், ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தாமல் பல ஆண்டுகளாக ஆட்சி மாற்றங்கள் நடந்து வருகிறது.
100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில் மிகப்பெரிய சுதந்திர போராட்ட வீரரான விட்டல்பாய் படேல், மத்திய சட்டசபையின் முதலாவது தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய சபாநாயகரானார். சர்தார் வல்லபாய் படேலின் சகோதரரான விட்டல்பாய் படேலின் பங்களிப்பு பல ஆண்டுகளாக இருட்டடிப்பு செய்யப்பட்டது. நாட்டின் விடுதலைப்போராட்டம் முக்கியம் என்றால் நாட்டை நடத்துவதும் சட்டமன்ற நடைமுறைகளை நிறுவுவதும் அதைப்போன்று முக்கியம் ஆகும். கடினமான நாட்களில் கூட ஜனநாயகத்தை நிறுவுவதிலும் வலுப்படுத்துவதிலும் விட்டல்பாய் படேல் முக்கிய பங்கு வகித்தார். நாம் அனைவரும் அதை நினைவில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அமித்ஷா கூறினார்.