2-ம் கட்ட தேர்தல்: பீகாரில் 122 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு
122 சட்டசபை தொகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது.;
பாட்னா,
பீகார் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடக்கிறது. 243 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில், முதல்கட்டமாக 121 தொகுதிகளில் கடந்த 6-ந் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதுவரை இல்லாத அளவாக 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், மீதி உள்ள 122 சட்டசபை தொகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. 20 மாவட்டங்களில் அடங்கி உள்ள இத்தொகுதிகளில் 1,302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 3 கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 45 ஆயிரத்து 399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த சுமார் 4 லட்சம் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து பீகார் போலீஸ் டி.ஜி.பி. வினய்குமார் ஒரு பேட்டியில் கூறியதாவது:-
தேர்தல் கமிஷன், மாநில அரசு, போலீ்ஸ் ஆகியோர் எடுத்த நடவடிக்கைகளால் முதல்கட்ட தேர்தலில் அதிக வாக்குகள் பதிவாகின. எந்த வன்முறை சம்பவமும் நடக்கவில்லை. தற்போது 2-வதுகட்ட தேர்தலுக்கு முற்றிலும் தயாராகி விட்டோம். போதுமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 4 லட்சம் பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
நேபாளத்தை ஒட்டிய மாவட்டங்களில் கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டத்தை யாரும் கையில் எடுக்கவிட மாட்டோம். எந்த அவசரநிலையையும் சமாளிக்க பயங்கரவாத தடுப்பு படை, சிறப்பு அதிரடிப்படை கமாண்டோக்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து, 14-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. ஆட்சியை பிடிப்பது எந்த கூட்டணி என்று அப்போது தெரிய வரும்.
இடைத்தேர்தல்கள்
பீகார் சட்டசபை தேர்தலுடன், ஒடிசா மாநிலம் நுவபடா சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் இன்று நடக்கிறது. பிஜு ஜனதாதளம் எம்.எல்.ஏ. ராஜேந்திர டோலகியா மரணம் அடைந்ததால் இடைத்தேர்தல் நடக்கிறது.தெலுங்கானா மாநிலம் ஜூபிளி ஹில்ஸ் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலும் இன்று நடக்கிறது.
ஜார்கண்ட் மாநிலம் காட்சிலா சட்டசபை தொகுதி, காஷ்மீரின் ஜம்மு பகுதியில் உள்ள நக்ரோடா சட்டசபை தொகுதி ஆகியவற்றிற்கும் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது.