நெதன்யாகுவை பாராட்டிய பிரதமர் மோடி - காங்கிரஸ் கடும் விமர்சனம்
நெதன்யாகுவை பிரதமர் மோடி அளவின்றி பாராட்டுவது தார்மீக ரீதியாக கொடூரமாக இருக்கிறது என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
இஸ்ரேல்-காசா இடையிலான அமைதி ஒப்பந்தத்துக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி “டிரம்பின் இஸ்ரேல்–ஹமாஸ் போர் நிறுத்த அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். இது பிரதமர் நெதன்யாகுவின் சிறப்பான தலைமையை எடுத்துரைக்கிறது” என்று பதிவிட்டார்.
இந்நிலையில், நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தது குறித்து காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
“காசா தொடர்பான புதிய நிகழ்வுகளுக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை புகழ்ந்துள்ளார். அவரது ஆர்வம் ஆச்சரியம் அளிக்கவில்லை. ஆனால், காசாவில் கடந்த 20 மாதங்களாக இனப்படுகொலையை கட்டவிழ்த்து விட்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை பிரதமர் மோடி அளவின்றி பாராட்டுவதுதான் அதிர்ச்சியாகவும், வெட்கக்கேடாகவும், தார்மீக ரீதியாக கொடூரமாகவும் இருக்கிறது.
கடந்த 1988-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே சுதந்திரமான, இறையாண்மை கொண்ட பாலஸ்தீனத்தை இந்தியா அங்கீகரித்தது. தற்போது, 150-க்கு மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன. ஆனால், சுதந்திரமான பாலஸ்தீனத்தின் எதிர்காலம் குறித்து பிரதமர் மவுனம் சாதிக்கிறார். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் இஸ்ரேலிய குடியிருப்புகள் விரிவாக்கம் செய்யப்படுவது பற்றியும் பிரதமர் மோடி மவுனம் சாதிக்கிறார்.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.