பிரதமர் மோடி இன்று ராஜஸ்தான் வருகை; ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
ராஜஸ்தானின் புகழ் பெற்ற கர்ணி மாதா கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்யவுள்ளார்.;
ஜெய்ப்பூர்,
பிரதமர் மோடி ராஜஸ்தானின் பிகானீர் மாவட்டத்திற்கு இன்று வருகை தருகிறார். ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இவற்றில் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதும் மற்றும் முடிவடைந்த திட்டங்களை தொடங்கி வைப்பதும் அடங்கும்.
அவர் தேஷ்னோக் பகுதியில், மறுசீரமைக்கப்பட்ட ரெயில் நிலையம் ஒன்றை தொடங்கி வைப்பதுடன், அந்த பகுதியில் உள்ள புகழ் பெற்ற கர்ணி மாதா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யவுள்ளார். பலானா பகுதியில் நடைபெறவுள்ள பொது கூட்டம் ஒன்றிலும் கலந்து கொண்டு அவர் பேச இருக்கிறார்.
சமீபத்தில் இந்திய ஆயுத படைகள் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னர் இந்த கோவிலுக்கு அவர் செல்வது முதன்முறையாகும். ராஜஸ்தானின் கலாசார மற்றும் ஆன்மிக பாரம்பரியத்துடனான பிரதமர் மோடியின் வலுவான தொடர்பை இது எடுத்து காட்டுகிறது.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, அவரை கவுரவிக்கும் வகையில் கோவிலில் சிறப்பு சடங்குகள் மற்றும் வழிபாடுகள் நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.