ராகுல் காந்தி பேச்சால் ரூ.250 இழப்பு; நஷ்டஈடு கோரி கோர்ட்டில் மனு தாக்கல்
இந்தியாவுக்கு எதிரான ராகுல் காந்தியின் பேச்சால் ரூ.250 இழப்பு ஏற்பட்டு விட்டது என கூறி நபர் ஒருவர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.;
பாட்னா,
பீகாரின் சமஸ்திப்பூர் மாவட்டத்தில் சோனுப்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் முகேஷ் சவுத்ரி. இவர் ரோஸ்ரா மண்டலத்திற்கு உட்பட்ட உள்ளூர் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். அதில், நான் 5 லிட்டர் பாலை வாளி ஒன்றில் எடுத்து சென்றேன். ஒரு லிட்டர் பாலின் விலை ரூ.50 ஆகும்.
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பேசிய பேச்சை கேட்டதும் எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. இதனால், பால் வாளி கையில் இருந்து தவறி விழுந்து விட்டது.
இதில், பால் முழுவதும் வீணாகி விட்டது என குறிப்பிட்டு இருக்கிறார். அதனால், ரூ.250 இழப்பீடு தரவேண்டும் என மனுவில் கோரியுள்ளார். இதேபோன்று, புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் தேசத்துரோக பிரிவு உள்பட காந்திக்கு எதிராக வழக்கு விசாரணையும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
அவருடைய மனு பற்றிய நகல் ஒன்றையும் சான்றுக்காக ஊடகத்தினரிடம் அவர் காண்பித்துள்ளார். எனினும் அவருடைய இந்த மனு கோர்ட்டில் விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டது பற்றிய தகவல் எதுவும் வெளிவரவில்லை.