ராஜஸ்தான்: அஜ்மீர் தர்கா, கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
ராஜஸ்தான் அஜ்மீர் தர்கா, கலெக்டர் அலுவலகத்திற்கு கடந்த 4-ந்தேதியும் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு இருந்தது.;
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானில் உள்ள பிரபல அஜ்மீர் தர்கா, கலெக்டர் அலுவலகம் மற்றும் ராஜஸ்தான் ஐகோர்ட்டின் ஜெய்ப்பூர் கிளை ஆகியவற்றிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடப்பட்டு உள்ளன. இதுபற்றி மாஜிஸ்திரேட் அந்தஸ்திலான உயரதிகாரி நரேந்திர குமார் மீனா செய்தியாளர்களிடம் இன்று மதியம் கூறும்போது, இன்று காலை 10.13 மணியளவில் அஜ்மீர் தர்கா, கலெக்டர் அலுவலகத்தில் அதிக சக்தி வாய்ந்த ஆர்.டி.எக்ஸ் வகை வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என இ-மெயில் ஒன்று கிடைக்க பெற்றது.
உடனடியாக நாங்கள் இது தொடர்பாக, பாதுகாப்பு அமைப்புகள், போலீசார், நுண்ணறிவு பிரிவினர் மற்றும் மோப்ப நாய் குழுவுடன் கூடிய வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர் குழு ஆகியவற்றிற்கு நாங்கள் தகவல் தெரிவித்தோம்.
அவர்கள் வந்து தொடர்புடைய பகுதிகளில் முழு அளவில் சோதனை மேற்கொண்டனர். ஆனால், கலெக்டர் அலுவலகத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் கிடைக்க பெறவில்லை. இதனை தொடர்ந்து, நாங்கள் தர்காவில் சோதனை செய்ய இருக்கிறோம் என கூறினார். இதுபற்றி தர்கா நிர்வாகத்தினரிடம் தகவல் தெரிவித்தோம். அவர்கள் தர்காவில் இருந்த அனைவரையும் வெளியேற்றி இருக்கின்றனர் என்றார்.
கடந்த 4-ந்தேதியும் இதேபோன்றதொரு மிரட்டல் இ-மெயில் வந்தது. அப்போது இரு இடங்களிலும் சோதனை செய்ததில் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. இதுபற்றி எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறினார்.