யுனெஸ்கோ பாரம்பரிய கலாசார பட்டியலில் இடம்பெற்றது தீபாவளி
இந்தியாவில் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையின் மரபை பாதுகாக்கும் வகையில் யுனெஸ்கோ அறிவித்துள்ளது.;
புதுடெல்லி,
ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமாக விளங்கும் யுனெஸ்கோவின் தலைமையகம் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ளது. இதில், இந்தியா உட்பட பல நாடுகள் அங்கம் வகிக்கின்றன. உலக மரபு சின்னங்கள் பட்டியலில், பல நாடுகள் தங்களின் முக்கியமான பாரம்பரிய இடங்கள், கலாச்சாரங்களை அவ்வப்போது சேர்த்து வருகின்றன. ஆய்வுக்கு பின், யுனெஸ்கோ பட்டியலில் அவை சேர்க்கப்படுகின்றன.
இந்தநிலையில், யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலில் இந்துக்களின் தீபாவளிப் பண்டிகையும் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசாரத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியாவுக்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள், மனித குலத்தின் கலாசார பாரம்பரியப் பட்டியலில் (UNESCO List of Intangible Cultural Heritage of Humanity) தீபாவளிப் பண்டிகையும் சேர்க்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் பதவி காலத்தில், இந்தியாவின் கலாசார பாரம்பரியங்களுக்கு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்து வருகிறது. இந்த புதிய மைல்கல்லும், அதன் பாதையை வலுப்படுத்துகிறது. தீபாவளியைக் கொண்டாடும் நோக்கமான, நம்பிக்கை, நல்லிணக்கம் மற்றும் சமத்துவம் போன்றவற்றை உலகளவில் எடுத்துச் செல்ல இந்தக் கவுரவம் உதவுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
“இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். எங்களைப் பொறுத்தவரை, தீபாவளி நமது கலாச்சாரம் மற்றும் வாழ்வியலுடன் மிகவும் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. இது நமது நாகரிகத்தின் ஆன்மா. இது வெளிச்சத்தையும், நீதியையும் வெளிப்படுத்துகிறது. யுனெஸ்கோவின் பாரம்பரியப் பட்டியலில் தீபாவளி சேர்க்கப்படுவது இத்திருவிழாவின் உலகளாவிய பிரபலத்துக்கு மேலும் பங்களிக்கும். ஸ்ரீ ராமரின் கொள்கைகள் நம்மை என்றென்றும் வழிநடத்தட்டும். என அதில் பதிவிட்டுள்ளார்.