கேரள கடற்கரை பகுதிகளுக்கு 'ரெட் அலர்ட்' - மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்
கேரள கடற்கரை பகுதிகளில் சீற்றம் அதிகரித்து காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.;
Image Courtesy : PTI
திருவனந்தபுரம்,
கேரள கடலோர பகுதிகளில், கடல் அலையின் சீற்றம் அதிகரித்து காணப்படும் என கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம்(INCOIS) தெரிவித்துள்ளது. இதனால் கேரள கடலோர பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.30 மணி முதல், நாளை (புதன்கிழமை) இரவு 11.30 மணி வரை 'ரெட் அலர்ட்'(சிவப்பு எச்சரிக்கை) விடுக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றத்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சிறு படகுகள் மற்றும் விசைப்படகுகள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், கடலோர பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லுமாறும் கேரள அரசு அறிவுறுத்தி உள்ளது. மீனவர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் என யாரும், மறுஅறிவிப்பு வரும் வரை கடற்கரை பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.