குடியரசு தின வாழ்த்துகள்; உலக தலைவர்களுக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் நன்றி

உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு தலைவர்களிடம் இருந்து மத்திய மந்திரி ஜெய்சங்கரின் எக்ஸ் வலைதளத்திற்கு வாழ்த்துகள் குவிந்து விட்டன.;

Update:2026-01-26 20:26 IST

புதுடெல்லி,

நாட்டின் 77-வது குடியரசு தினம் டெல்லி கடமை பாதையில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒற்றுமை, சமத்துவம் மற்றும் கலாசார பாரம்பரிய செறிவை கவுரவிக்கும் வகையில் நடந்த இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க, 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடப்பட்டு இருந்தது. விமான சாகசங்கள், ராணுவ அணிவகுப்பு, அலங்கார ஊர்திகள் என குடியரசு தின கொண்டாட்டம் களை கட்டியது.

போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு விரிவான கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு இருந்தன. குடியரசு தினத்தில் ராணுவம், கடற்படை மற்றும் விமான படை என முப்படைகளின் அணிவகுப்பு ஆகியவற்றுடன் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், பல்வேறு துறைகளை சேர்ந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் இடம்பெற்றன.

இதனை ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலா வான்டர் லெயன் உள்ளிட்டோரும் கண்டுகளித்தனர். இதேபோன்று வந்தே மாதரம் தேசிய பாடலின் 150-ம் ஆண்டு கால கொண்டாட்டமும் இன்று நடைபெற்றது.

இந்நிலையில், இந்திய குடியரசு தினத்தில் உலக தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு தலைவர்களிடம் இருந்து மத்திய மந்திரி ஜெய்சங்கரின் எக்ஸ் வலைதளத்திற்கு வாழ்த்துகள் குவிந்து விட்டன.

இதனையொட்டி, பதிலுக்கு அவர்களுக்கு மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று நன்றி தெரிவித்து கொண்டார்.

இதன்படி அர்மீனியா நாட்டின் வெளிவிவகார துறை மந்திரி அராரத் மிர்ஜோயன், மாலத்தீவின் வெளிவிவகார துறை மந்திரி அப்துல்லா கலீல், மாலத்தீவு ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல்லா ஷாகித், ஆஸ்திரேலிய வெளிவிவகார துறை மந்திரி பென்னி வாங் ஆகியோருக்கு தன்னுடைய நன்றிகனை அவர் தெரிவித்து உள்ளார்.

குடியரசு தின கொண்டாட்டங்கள் முடிந்ததும், விதிமுறைகளை மீறி, பிரதமர் மோடி டெல்லி கடமை பாதையில் சிறிது தூரம் நடந்து சென்று, இருக்கைகளில் அமர்ந்திருந்த பார்வையாளர்களை நோக்கி கையசைத்து, அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். அவர் டெல்லி கடமை பாதையின் மற்றொரு பகுதிக்கும் சென்றார். அப்போது சிலர் அவருடன் புகைப்படங்களை எடுத்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்