3.5 ஏக்கர் நிலத்தை லஞ்சமாக எழுதி வாங்கிய ராபர்ட் வதேரா- அமலாக்கத்துறை

ராபர்ட் வதேரா மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன;

Update:2025-08-09 20:19 IST

புதுடெல்லி,

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். குறிப்பாக நிலம் வாங்கி விற்கும் ரியல் எஸ்டேட் தொழிலை நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் பணப்பரிமாற்ற முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறது

.அரியானா மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. அப்போது காங்கிரஸ் முதலமைச்சராக பூபேந்தர் சிங் ஹூடா இருந்தார். இவரிடம் பிரியங்கா கணவர் ராபர்ட் வதேரா நெருக்கமாக பழகி வந்தார். தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அரியானா மாநிலத்தில் குர்கான் உள்பட பல இடங்களில் ராபர்ட் வதேரா குறைந்த விலையில் அரசு நிலத்தை வாங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அந்த நிலங்களை பிறகு அவர் மிக உயர்ந்த விலைக்கு விற்றதாகவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டது.இது தொடர்பாக கடந்த மாதம் 17-ம் தேதி குர்கான் கோர்ட்டில் ராபர்ட் வதேரா மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இது தொடர்பாக அவர்கள் ராபர்ட் வதேரா வுக்கு சொந்தமான ரூ.37 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி வைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், ராபர்ட் வதேரா மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், “ராபர்ட் வதேரா குர்கானில் லஞ்சமாக 3.5 ஏக்கர் பரப்பளவு நிலத்தை பெற்றுக்கொண்டார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போதைய அரியானா முதலமைச்சர் பூபேந்தர் சிங் ஹூடா துணையுடன் இந்த முறைகேடு நடந்ததாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த 3.5 ஏக்கர் நிலத்தை ராபர்ட் வதேரா சிறிது நாட்களுக்குப் பிறகு ரூ.58 கோடிக்கு விற்றுவிட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.இது தொடர்பாக 20 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக வருகிற 28-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று சிறப்பு கோர்ட்டு அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்