சென்னை உள்ளிட்ட 4 ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள் இடமாற்றம்: சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை
சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் இந்தியாவின் தலைமை நீதிபதி தலைமையில் செயல்படுகிறது.;
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா கடந்த 13ஆம் தேதி ஓய்வு பெற்ற நிலையில் மூத்த நீதிபதிகளில் ஒருவரான அபய் ஓகாவும் ஓய்வு பெற்றார். இதை அடுத்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 34 இல் இருந்து 31 ஆக குறைந்தது.
தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக பிஆர் கவாய் பதவியேற்ற நிலையில் கடந்த 26-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் கூடியது. தொடர்ந்து மூன்று மாநில உயர் நீதிமன்றங்களில் இருந்து மூன்று நீதிபதிகளை சுப்ரீம் கோர்ட்டிற்கு புதிய நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. அதன்படி கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அஞ்சார்யா, ராஜஸ்தான் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி விஜய்பிஷ்னு, மும்பை ஐகோர்ட்டு நீதிபதி சந்துருகர் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் இந்தியாவின் தலைமை நீதிபதி தலைமையில் செயல்படுகிறது. இந்த கொலீஜியம் சுப்ரீம் கோர்ட்டு மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை செய்கிறது. நீதிபதிகளின் பதவி உயர்வு, இடமாற்றம் மற்றும் பிற நிர்வாக முடிவுகளை எடுக்கிறது. இந்தநிலையில்,
சென்னை உள்ளிட்ட ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் 4 பேரை இடமாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது.
இடம் மாற்றம் செய்யப்பட்ட நீதிபதிகள் விவரம் வருமாறு:-
* சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஸ்ரீராமை, ராஜஸ்தான் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது.
* ராஜஸ்தான் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக உள்ள மணீந்திர மோகனை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
* திரிபுரா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக உள்ள அப்ரேஷ் குமார் சிங்கை தெலுங்கானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
* ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக உள்ள ராசந்திர ராவை திரிபுரா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஐகோர்ட்டு நீதிபதிகள் 21 பேரை இடமாறுதல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரைத்த தகவல் நேற்று வெளியானது. இன்று தலைமை நீதிபதிகள் 4 பேரை இடமாறுதல் செய்ய பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.