எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் போலி சான்றிதழ்களுடன் மருத்துவ படிப்பில் சேர முயன்ற மாணவி கைது
தரவரிசை அட்டை மற்றும் ஒதுக்கீடு கடிதம் அனைத்தும் போலியானவை என்பதை மாணவி ஒப்புக்கொண்டார்.;
பிலாஸ்பூர்,
இமாசல பிரதேசத்தின் பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி உள்ளது. இங்கு 2025-ம் ஆண்டுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்காக பீகாரை சேர்ந்த அங்கிதா பாரதி என்ற மாணவி வந்தார்.
அவரது பெயர், அந்த எய்ம்சுக்காக தேர்வான 100 பேர் பட்டியலில் இல்லை. உடனே அவரது சான்றிதழ்களை அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது அவை போலியானவை என தெரியவந்தது.உடனே இதுகுறித்து அதிகாரிகள் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கிதா பாரதியை கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவரது தரவரிசை அட்டை மற்றும் ஒதுக்கீடு கடிதம் அனைத்தும் போலியானவை என்பதை ஒப்புக்கொண்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.