கடவுள் ஜெகந்நாதர் தேருக்கு... 280 கி.மீ. வேகத்தில் செல்லும் சுகோய் போர் விமான டயர்கள் பயன்பாடு
ரஷியாவின் சுகோய் போர் விமானம் மேலே எழும்பியதும் மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்ல கூடியது.;
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா நகரில், இஸ்கான் ரத யாத்திரையில் பயன்படுத்தப்படும் கடவுள் ஜெகந்நாதரின் தேருக்கு இனி, புதிய சுகோய் போர் விமானத்தின் டயர்கள் பயன்படுத்தப்படும். இதுவரை போயிங் 747 ரக விமானத்தின் டயர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
இதுபற்றி இஸ்கான் கொல்கத்தாவின் துணை தலைவர் ராதாராமன் தாஸ் கூறும்போது, 48 ஆண்டுகளாக போயிங் 747 ரக விமானத்தின் டயர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
2005-ம் ஆண்டு அவை நல்ல நிலையில் இல்லை என நாங்கள் கவனித்தோம். 2018-ம் ஆண்டு போயிங் ரக விமானம் போன்று சுகோய் விமானம் அதே அளவில் இருந்தது தெரிய வந்தது.
அதனால், எம்.ஆர்.எப். நிறுவனத்திடம் இதுபற்றி அணுகினோம். இறுதியாக, நடப்பு ஆண்டில் அவர்கள் பதிலளித்தனர். சமீபத்திய பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான பதற்றங்களுக்கு மத்தியில், சுகோய் விமானத்தின் டயர்கள் தேரில் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
நாங்கள் நேற்று சோதனை ஓட்டம் நடத்தினோம். அமைதியே சிறந்த தேர்வாக இருக்கும் என்பதே கடவுள் ஜெகந்நாதர் அளித்திருக்கும் செய்தியாக இருக்க கூடும் என்று பேசியுள்ளார்.
ரஷியாவின் சுகோய் போர் விமானம், மேலே எழும்பியதும் மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்ல கூடிய திறன் படைத்தது. இந்த டயர்கள் இனி தேருக்கு பயன்படுத்தப்படும்போது, மணிக்கு 1.4 கி.மீ. என்ற வேகத்தில் தேர் எளிதில் நகர்ந்து செல்லும்.