பஹல்காம் தாக்குதல் குறித்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
இது போன்ற பிரச்சினையை நீதித்துறைக்குள் கொண்டு வர வேண்டாம் என்று மனுதாரருக்கு நீதிபதிகள் கண்டித்தனர்.;
புதுடெல்லி,
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பிரபல சுற்றுலா தலமான பைசரனில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் திடீர் என துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதன் பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத இயக்கத்துக்கு தொடர்பு உள்ளது தெரியவந்தது.
இந்நிலையில் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு காஷ்மீரில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு மற்றும் காஷ்மீர் அரசு நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும், இது தொடர்பான விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க கோரி பதேஷ் குமார் சாகு என்பவர் பொதுநல மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் சூர்யாகாந்த், கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:-
இந்த முக்கியமான தருணத்தில், இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் பயங்கரவாதத்தை எதிர்த்து போராட கைகோர்த்துள்ளனர். இந்த வகையான பொதுநல மனுவை தாக்கல் செய்வதன் மூலம் பாதுகாப்பு படைகளின் மன உறுதியை குலைக்க விரும்புகிறீர்களா? இந்த வகையான பிரச்சினையை நீதித்துறைக்குள் கொண்டு வர வேண்டாம். மனுதாரர்கள் இந்த பிரச்சினையின் உணர்திறனை உணர்ந்து, படைகளை மனச்சோர்வடைய செய்யும் எந்த காரியமும் செய்ய வேண்டாம்.
நீங்கள் ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியை விசாரிக்க சொல்கிறீர்கள். அவர்கள் பயங்கரவாத விசாரணையில் நிபுணர்கள் அல்ல. எங்களை உத்தரவு பிறப்பிக்க சொல்லாதீர்கள். நீங்கள் விலகிக் கொள்வது நல்லது. பொதுநல மனுவை வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர். இதையடுத்து பொதுநல மனுவை மனுதாரர் திரும்ப பெற்றுக்கொண்டார்.