அலுவலக நாற்காலியில் அமர்ந்து இந்தி பாடல் பாடிய தாசில்தார் பணியிடை நீக்கம் - வைரல் வீடியோ

அலுவலக நாற்காலியில் அமர்ந்து இந்தி பாடல் பாடிய தாசில்தார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.;

Update:2025-08-18 16:35 IST

மும்பை,

மராட்டிய மாநிலம் நாந்தெட் மாவட்டத்தில் உம்ரியில் தாசில்தாராக இருந்து வந்தவர் பிரசாந்த் தோரட். இவர் சமீபத்தில் அருகில் உள்ள மற்றொரு மாவட்டமான லத்தூரில் உள்ள ரெனாபூருக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்தநிலையில் கடந்த 8-ந் தேதி அவர் ஏற்கனவே பணி செய்த உம்ரி தாலுகா அலுவலகத்தில் தோரட்டுக்கு பிரியாவிடை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியின் போது, ஊழியர்கள் முன்னிலையில் பிரசாந்த் தோரட் அலுவலக நாற்காலியில் அமர்ந்தபடி, நடிகர் அமிதாப் பச்சன் நடித்த ‘யாரானா’ இந்தி படத்தின் “யாரா தேரி யாரி கோ” என்ற பாடலை மெய்மறந்து பாடினார்.

இதை அங்கிருந்த சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தனர். வைரலாக பரவிய இந்த வீடியோ பதிவு கடுமையான எதிர்வினைகளை தூண்டியது. பொறுப்பான அரசாங்க பதவியில் இருப்பவரின், இந்த நடத்தை பொருத்தமற்றது என்று பலர் கருத்து பதிவிட்டனர்.

இது பற்றி அறிந்த நாந்தெட் மாவட்ட கலெக்டர், உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பித்தார். இதைத்தொடர்ந்து சிவில் சர்வீசஸ் (நடத்தை) விதிகள், 1979-ஐ மீறியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. எனவே பிரசாந்த் தோரட்டை பணியிடை நீக்கம் செய்து மண்டல ஆணையர் உத்தரவிட்டார். தாசில்தார் மெய்மறந்து பாடிய பாடல் தற்போது அவரை படாதபாடு படுத்தி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்