வேலை இழந்த ஐ.டி. ஊழியர் கொள்ளையனாக மாறிய விபரீதம்

வீட்டு செலவுக்கு கூட கடன் வாங்க வேண்டிய நிலைக்கு முன்னாள் ஐ.டி. ஊழியர் தள்ளப்பட்டார்.;

Update:2025-08-06 09:09 IST

புனே,

மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் பிம்பிள் குராவ் பகுதியில் வங்கி மேலாளர் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சமீபத்தில் மேலாளர் அரியானாவுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். எனவே அந்த வீட்டில் மேலாளரின் மகன்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த மாதம் 31-ந் தேதி கூரியர் ஊழியர் என கூறிக்கொண்டு ஒருவர் வங்கி மேலாளர் வீட்டுக்குள் நுழைந்தார். திடீரென வீட்டில் இருந்தவர்களிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம், நகையை கேட்டார்.

இந்தநிலையில் அங்கு வந்த மற்றொரு மகன் கொள்ளையனை மடக்கி பிடித்தார். தகவல் அறிந்து சென்ற போலீசார் கொள்ளைனை பிடித்து அவரிடம் இருந்த துப்பாக்கி, தோட்டா, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து நடந்த விசாரணையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் முன்னாள் ஐ.டி. நிறுவன ஊழியர் சங்போய் கோம் சேர்டோ (வயது40) என்பது தெரியவந்தது. இவரது சொந்த ஊர் மணிப்பூர் ஆகும். இவர் 12 ஆண்டுகளுக்கு முன் வேலைக்காக புனே வந்து உள்ளார். புனேயில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் தொழில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். மேலும் குடும்பத்தினருடன் என்.ஐ.பி.எம். பகுதியில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு அவர் வேலையை இழந்தார். இதன் காரணமாக அவர் புனேயில் உள்ள 2 வீடுகளுக்கு வங்கி கடன் தவணை செலுத்த முடியாமல் திணறி உள்ளார். மேலும் வீட்டு செலவுக்கு கூட கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் தான் அவர் வங்கி மேலாளரை கண்காணித்து அவரது வீட்டில் கொள்ளையடிக்க திட்டம் போட்டார். எனினும் அவர் கொள்ளை அடிக்க சென்ற போது வீட்டில் மகன்கள் இருந்ததால் அவர் சிக்கி உள்ளார்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசாா் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சங்போய் கோம் சேர்டோவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்