ஜம்மு காஷ்மீரின் தோடாவில் மேகவெடிப்பு; 4 பேர் பலி
கஹாரா பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக 10க்கும் மேற்பட்ட வீடுகள், சாலைகள் உள்ளிட்டவை சேதம் அடைந்தன.;
ஜம்மு காஷ்மீர்,
ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கடந்த சில நாட்களாகவே உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மலைப்பிரதேசங்களில் அடிக்கடி நிலச்சரிவுகள் மற்றும் மேக வெடிப்புகள் ஏற்பட்டு பெரும் சேதத்தை உருவாக்கி உள்ளன. இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
இதற்கிடையில், கதுவா, சம்பா, தோடா, ஜம்மு, ரம்பன் மற்றும் கிஷ்த்வார் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. தோடா மாவட்டத்தின் கஹாரா பகுதியில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு காட்டாற்று வெள்ளத்தால் 10க்கும் மேற்பட்ட வீடுகள், சாலைகள் சேதம் அடைந்தது. சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் தண்ணீர் அபாய எல்லையைத் தாண்டி செல்வதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழையால் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.