‘கொரோனா தடுப்பூசிக்கும், இளம் வயதினரின் திடீர் மரணத்திற்கும் சம்பந்தம் இல்லை’ - எய்ம்ஸ் ஆய்வில் தகவல்
இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவதற்கு இன்றைய வாழ்க்கை முறை ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என மருத்துவர் சுதிர் அரவா தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
நாட்டில் இளம் வயதினர் திடீரென மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் மூலம் கடந்த ஓராண்டில் தெரியவந்திருக்கும் தகவல்கள் குறித்து எய்ம்ஸ் மருத்துவர் சுதிர் அரவா கூறுகையில், கொரோனா தடுப்பூசிக்கும், இளம் வயதினரின் திடீர் மரணத்திற்கும் தொடர்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “இளம் வயதினரின் திடீர் மரணங்கள் மாரடைப்பால் ஏற்படுகின்றன. இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும்போது இதயத்தின் செயல்பாடு நிறுத்தப்படுகிறது. இதன் காரணமாக திடீர் மரணம் ஏற்படுகிறது. இத்தகைய மரணங்கள் இந்தியாவில் இதுவரை ஆவணப்படுத்தப்படவில்லை. எங்கள் ஆய்வின் முதற்கட்ட அறிக்கையில் இவற்றை ஆவணப்படுத்தி உள்ளோம்” என்று தெரிவித்தார்.
இது போன்ற இளம் வயதினரின் மாரடைப்பு மரணங்களுக்கும், கொரோனா தடுப்பூசிக்கும் எதேனும் தொடர்பு உள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “எங்கள் ஆய்வை தொடங்குவதற்கு முன்பு இதற்கான சாத்தியங்களையும் நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டோம். ஆனால் ஆய்வின் முடிவில் கிடைத்திருக்கும் தகவல்களின்படி கொரோனா தடுப்பூசிக்கும், இளம் வயதினரின் திடீர் மரணத்திற்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “உலக அளவில் பெரும்பாலும் முதியவர்கள் மாரடைபால் உயிரிழக்கின்றனர். அது பற்றிய பல்வேறு ஆய்வறிக்கைகள் இருக்கின்றன. ஆனால் இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழப்பது தொடர்பான ஆய்வறிக்கைகள் நம்மிடம் இல்லாமல் இருந்தது. தற்போது இது குறித்து எங்கள் அறிக்கையில் விரிவாக ஆவணப்படுத்தி உள்ளோம்.
இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவதற்கு இன்றைய வாழ்க்கை முறை, மதுப்பழக்கம் ஆகியவை முக்கிய காரணங்களாக இருக்கலாம். இது தொடர்பாக தனித்தனியாக விரிவான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். ஆனால் கொரோனா தடுப்பூசிக்கும், இளம் வயதினரின் திடீர் மரணங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது எங்கள் ஆய்வில் தெளிவாக தெரியவந்துள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.