50 சதவீத வரி விவகாரம்: மெக்சிகோவுக்கு இந்தியா எச்சரிக்கை

மெக்சிகோவுடனான தனது கூட்டாண்மைக்கு இந்தியா மதிப்பு அளிக்கிறது என்று வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.;

Update:2025-12-14 17:57 IST

புதுடெல்லி,

இந்தியப் பொருட்களின் இறக்குமதிக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்திருந்த நிலையில், தற்போது மெக்சிகோவும் இந்தியா மீது 50 சதவீத வரியை விதிப்பதாக அறிவித்துள்ளது. தங்களுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபடாத இந்தியா, சீனா, தென் கொரியா, தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை 5 முதல் 50 சதவீதம் வரை மெக்சிகோ உயர்த்தியுள்ளது.

இந்த வரி உயர்வு வரும் ஜனவரி 1-ந் தேதி முதல் அமலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வரி உயர்வு தொடர்பாக மெக்சிகோவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதுகுறித்து மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மெக்சிகோவுடனான தனது கூட்டாண்மைக்கு இந்தியா மதிப்பு அளிக்கிறது. இரு நாடுகளிலும் உள்ள வணிகங்களுக்கும் நுகர்வோருக்கும் பயனளிக்கும் ஒரு நிலையான மற்றும் சமநிலையான வர்த்தகச் சூழலை நோக்கி கூட்டாகச் செயல்படத் தயாராக உள்ளது. பரஸ்பரம் நன்மை பயக்கும் தீர்வுகளைக் கண்டறிய இந்தியா மெக்சிகோவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அதேவேளையில், இந்தியா தனது ஏற்றுமதியாளர்களின் நலன்களைப் பாதுகாக்க பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும் உரிமையைக் கொண்டுள்ளது.மெக்சிகோ தன்னிச்சையாக மேற்கொண்ட வரி உயர்வால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையைத் தொடங்க இருதரப்பும் ஆர்வத்துடன் உள்ளன. இதற்கான வரையறைகள் விரைவில் இறுதி செய்யப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்