டிஜிட்டல் கைது செய்ததாக மிரட்டி முதியவரிடம் ரூ.1.32 கோடி மோசடி
மும்பை போலீஸ் என கூறி 87 வயது முதியவரை டிஜிட்டல் கைது செய்து ரூ.1.32 கோடியை மர்மநபர்கள் மோசடி செய்துள்ளர்.;
பெங்களூரு,
பெங்களூரு எலகங்கா அருகே வசித்து வருபவர் வரதராஜன் (வயது 87). இவரது வாட்ஸ்-அப் எண்ணுக்கு மர்மநபர்கள் தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது மர்மநபர்கள் தங்களை மும்பை போலீசார் எனக்கூறிக் கொண்டனர். பின்னர் வரதராஜிடம் நீங்கள் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும் மர்மநபர்கள் கூறினார்கள்.
உங்களது ஆதார் அடையாள எண்ணை 256 முறை பயன்படுத்தி, சட்டவிரோத பண பரிமாற்றம் நடத்தப்பட்டுள்ளதாக வரதராஜிடம் மர்மநபர்கள் தெரிவித்தனர். பின்னர் வரதராஜனை வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பில் மூத்த போலீஸ் அதிகாரி எனக்கூறிக் கொண்டு சீருடை அணிந்தபடி ஒரு நபர் பேசினார்.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு குறித்து விசாரிக்க மும்பை வர வேண்டும் என்றும், உங்களுக்கு 87 வயதாவதால் வீட்டில் இருந்தபடியே விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அந்த நபர் தெரிவித்தார். பின்னர் கடந்த மாதம் (நவம்பர்) 19-ந் தேதியில் இருந்து கடந்த 6-ந் தேதி வரை வரதராஜனை மர்மநபர்கள் டிஜிட்டல் கைது செய்தார்கள். இந்த சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், உங்களை கைது செய்யாமல் இருக்க தாங்கள் கேட்கும் பணத்தை கொடுக்க வேண்டும் என்று மர்மநபர்கள் மிரட்டினார்கள்.
விசாரணைக்கு பின்பு பணத்தை வங்கி கணக்குக்கே அனுப்பி வைத்து விடுவதாகவும் மர்மநபர்கள் தெரிவித்தனர். இதனை நம்பிய அவரும் குறிப்பிட்ட இடைவெளியில் ரூ.1 கோடியே 32 லட்சத்தை அனுப்பி வைத்தார். ஆனால், அந்த பணத்தை திரும்ப கொடுக்காமல் மர்மநபர்கள் மோசடி செய்து விட்டனர். இதுகுறித்து வடகிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் வரதராஜன் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.