தங்கையின் பிறந்தநாளுக்கு அழைத்து செல்லாததால் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திருமணத்துக்கு பிறகு மாதநாயக்கனஹள்ளி பகுதியில் தம்பதி வசித்து வந்தனர்.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா மாதநாயக்கனஹள்ளி பகுதியை சோ்ந்தவர் லட்சுமிநாராயணா. இவரது மனைவி ஐஸ்வர்யா (வயது 22). துமகூரு மாவட்டம் திப்தூரை சேர்ந்த இவர், லட்சுமிநாராயணாவை காதலித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு மாதநாயக்கனஹள்ளி பகுதியில் தம்பதி வசித்து வந்தனர்.
இந்த நிலையில் பெங்களூரு வடக்கு தாலுகா சியாமபட்டாரபாளையாவில் ஐஸ்வர்யாவின் தங்கை வசித்து வருகிறார். அவரது பிறந்தநாள் விழாவில் பங்கேற்க அழைத்து செல்லும்படி லட்சுமி நாராயணாவிடம் ஐஸ்வர்யா கேட்டுள்ளார். ஆனால், லட்சுமி நாராயணா, அவரை பிறந்தநாள் விழாவுக்கு அழைத்து செல்லவில்லை என தெரிகிறது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஐஸ்வர்யா, திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாதநாயக்கனஹள்ளி போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், ஐஸ்வர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாதநாயக்கனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.