பூச்சி கொல்லி மருந்தால் உணவு விஷமானதா..? தந்தை, 2 மகள்கள் உயிரிழந்த பரிதாபம்

ராய்ச்சூரில் உணவு விஷமாக மாறியதால் தந்தை, 2 மகள்கள் சிகிச்சை பலனின்றி பலியானார்கள்.;

Update:2025-07-23 09:57 IST

ராய்ச்சூர்,

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் சிருவாரா தாலுகா கே.திம்மாப்புரா கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் நாயக் (வயது 38). இவரது மனைவி பத்மா (35). இந்த தம்பதிக்கு 3 மகள்கள், ஒரு மகன் உண்டு. நேற்று முன்தினம் பத்மாவதி, தோட்டத்தில் விளைவித்த காய்கறிகளை பறித்து வந்து உணவு சமைத்துள்ளார். அந்த உணவை அவர், அவரது கணவர், குழந்தைகள் சாப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை தம்பதி, அவர்களது மகள்கள், மகன் ஆகிய 6 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதை பார்த்த உறவினர்கள் அவர்களை லிங்கசுகூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர்களில் ரமேஷ், மகள்கள் நாகரத்னா (8), தீபா (6) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

மேலும் பத்மாவதி மற்றும் மகள், மகன் ஆகியோர் உயிருக்காக போராடி வருகின்றனர். அவர்களுக்கு ராய்ச்சூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து வந்த போலீசார் பலியான 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார்  நடத்திய விசாரணையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரமேஷ், தோட்டத்தில் இருந்த கொத்தவரைக்காய் செடிகளுக்கு மருந்து தெளித்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் பத்மாவதி அந்த கொத்தவரைக்காய்களை பறித்து வந்து உணவு சமைத்துள்ளார். அந்த கொத்தவரைக்காயில் இருந்த பூச்சி கொல்லி மருந்தால், உணவு விஷமாகி 3 பேரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும் 3 பேர் பலியானதற்கு உண்மையான காரணம் என்ன என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகு தான் தெரியவரும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்