இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 06-05-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
கடந்த 2ம் தேதி கனடாவில் இருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானத்தில் கழிவறை அடைப்பால் ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகருக்கு திருப்பி விடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 மாதங்களில், ஏர் இந்தியா விமானத்தில் இதுபோன்ற பிரச்னை ஏற்படுவது இரண்டாவது முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சித்ரா பெளர்ணமியை ஒட்டி வரும் 11, 12ம் தேதிகளில் திருவண்ணாமலைக்கு, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து கூடுதல் சிறப்புப் பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி சூறையாடல் வழக்கில் 615 பேர் நேரில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் நேற்றிரவு இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதலில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைதான 13 பேருக்கு, வரும் 20ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாமகவின் சித்திரை முழுநிலவு மாநாட்டை ஒட்டி வரும் 11ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளை அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மீனாட்சி திருக்கல்யாணத்திற்கான சிறப்பு கட்டண அனுமதி சீட்டு விநியோகிக்கப்படுகிறது. இதன்படி, 8-ந்தேதி நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாணத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு ரூ.200, ரூ.500 என 2 வகையான சிறப்பு கட்டண சீட்டு விநியோகம் செய்யப்படும்.
ரூ.200 சிறப்பு கட்டண சீட்டு மூலம் 3 ஆயிரம் பேரும், ரூ.500 சிறப்பு கட்டண சீட்டு மூலம் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் புக் செய்த பொதுமக்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு கட்டண பாஸ் வழங்கப்படுகிறது.
சிறப்பு கட்டண சீட்டு பெற மதுரை மேல சித்திரை வீதி பகுதியில் உள்ள பிர்லா விடுதியில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரனின் 2-வது மகன் அஜித்குமார் கைது செய்யப்பட்டு உள்ளார். நாகேந்திரனுக்கு தொடர்புடைய வீடுகளில் மேற்கொண்ட சோதனையில் 56 பட்டாக்கத்திகள், சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தங்கம் விலை ஒரே நாளில் இன்று 2-வது முறையாக உயர்வு
தங்கம் விலை ஒரே நாளில் இன்று 2-வது முறையாக உயர்ந்து உள்ளது. இதன்படி, பவுன் ஒன்று ரூ.72,200 ஆக இருந்த நிலையில், மீண்டும் இன்று மாலை விலை உயர்ந்து, ரூ.72,800 ஆக அதிகரித்து காணப்படுகிறது.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கனி மெந்தர் பகுதியில் இன்று நடந்த விபத்தில் பஸ் ஒன்று சிக்கியது. இதில் பஸ்சில் பயணித்த 2 பயணிகள் உயிரிழந்தனர். 35 பேர் காயமடைந்தனர்.
மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் நகரில், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, டூடூ-பசந்த்கார் பகுதியில் பணியின்போது, உயிரிழந்த ஜான்டு அலி ஷேக் மற்றும் அவருடைய குடும்பத்தினரை நான் வணங்குகிறேன். அவருடைய மனைவியும், குழந்தைகளும் வந்துள்ளனர். நாட்டுக்காக அவர் உயிரை துறந்துள்ளார்.