அடுத்த சட்டசபை தேர்தலுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி காணாமல் போகும்: பா.ஜ.க.
வங்காளிகளுக்கு எதிராக பயங்கரவாத செயலை தொடுத்த எந்த கட்சியும் மேற்கு வங்காளத்தில் வெற்றி பெற முடியாது என மம்தா பானர்ஜி கூறினார்.;
காரக்பூர்,
மேற்கு வங்காளத்தில் அடுத்த சட்டசபை தேர்தலுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் என பா.ஜ.க.வின் மூத்த தலைவர் திலீப் கோஷ் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார். அப்போது அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் வீழ்ச்சியடைந்ததுடன் தற்போது மாநிலத்தில் உள்ள சூழலை ஒப்பிட்டு பேசினார்.
அவர் பேசும்போது, அடுத்த தேர்தலுடன் அந்த கட்சி முடிந்து விடும். அவர்கள் ஊழலில் ஈடுபடுகின்றனர். அரசு அலுவலகங்களில் பெரும் குழப்பம் காணப்படுகிறது. சட்டம் ஒழுங்கு இல்லை. இதனால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் பாடம் கற்பித்தது போன்று, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இதே நிலை வரும் என கூறினார்.
ஊழல் மற்றும் தவறான நிர்வாகம் ஆகியவற்றால், அரசு அமைப்பு சீர்கேட்டுக்கு தள்ளப்பட்டு உள்ளது என்றும் குற்றச்சாட்டாக கூறினார்.
கடந்த வியாழக்கிழமை மேற்கு வங்காள சட்டசபையில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேசும்போது, மாநிலத்தில் ஒரு பா.ஜ.க. எம்.எல்.ஏ. கூட இல்லை என்ற நிலைமை வரும். அவர்கள் தவிர்க்க முடியாத தோல்வியை சந்திப்பார்கள் என்றார். வங்காளிகளுக்கு எதிராக பயங்கரவாத செயலை தொடுத்த எந்த கட்சியும் மேற்கு வங்காளத்தில் வெற்றி பெற முடியாது என்று கூறினார்.
தொடர்ந்து அவர், பா.ஜ.க. வாக்கு திருட்டில் ஈடுபடுகிறது. மத்தியில் ஊழல் நிறைந்து காணப்படுகிறது. மோசடிகளின் தலைவராக உள்ளது. அக்கட்சியை நான் கடுமையாக கண்டிக்கிறேன் என்றும் பேசினார்.