உ.பி.: தலைக்கு ரூ. 50 ஆயிரம் சன்மானம் அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
என்கவுன்டர் நடந்த பகுதியில் துப்பாக்கி , தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.;
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தை சேர்ந்தவர் சபீர் (வயது 35). இவர் உத்தரபிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொள்ளை, அடிதடி, மிரட்டல் உள்பட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். சபீர் மீது 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்த சபீரின் தலைக்கு போலீசார் ரூ. 50 ஆயிரம் சன்மானம் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், அம்மாநிலத்தின் கோட்வாலி டிகர் பகுதியில் உள்ள சாலையில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக சபீர் தனது கூட்டாளியுடன் பைக்கில் வந்துள்ளார். போலீசாரை கண்டதும் தான் வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியால் சுட்டுவிட்டு சபீர் தப்பியோடியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், அருகில் உள்ள வனப்பகுதிக்குள் நுழைந்த சபீரை தேடியுள்ளனர். அப்போது, போலீசார் மீது சபீர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் சபீர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சபீரின் கூட்டாளி தப்பியோடிய நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர். என்கவுன்டர் நடந்த பகுதியில் துப்பாக்கி , தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.