கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேரை சுட்டுப்பிடித்த போலீசார்
சிகிச்சைக்குப்பின் 5 பேரும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.;
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தை சேர்ந்த போக்குவரத்து ஊழியரின் மகன் ஆயூஷ் (வயது 25). இவரை கடந்த 13ம் தேதி 11 பேர் கொண்ட கும்பல் கொண்ட கும்பல் படுகொலை செய்தது. இந்த கொலை தொடர்பாக 6 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில், இந்த கொலையில் தொடர்புடைய எஞ்சிய 5 பேர் பலியா மாவட்டத்தின் அப்ஹன் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை 3 மணியளவில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த குற்றவாளிகள் 5 பேரும் போலீசார் நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இதையடுத்து, போலீசார் நடத்திய பதிலடி துப்பாக்கி சூட்டில் 5 பேருக்கும் கால்களில் குண்டு பாய்ந்தது. இதனை தொடர்ந்து 5 பேரையும் கைது செய்த போலீசார், சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்குப்பின் 5 பேரும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.