காரை பார்க் செய்வதில் தகராறு; பக்கத்து வீட்டுக்காரரின் மூக்கை கடித்த நபர்
மிஸ்ரா தனது காரை பார்க் செய்ய முடியாத சூழ்நிலை உருவானது.;
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் நரமவ் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் பலர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு செயலாளராக ஆர்.எஸ். யாதவ் என்பவர் செயல்பட்டு வருகிறார். அவரது வீட்டிற்கு அருகே கிருஷ்ஜி மிஸ்ரா என்பவர் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கிர்ஷ்ஜி மிஸ்ரா கார் பார்கிங் செய்யும் இடத்தில் நேற்று இரவு வெறொரு கார் பார்க் செய்யப்பட்டிருந்தது. இதனால் மிஸ்ரா தனது காரை பார்க் செய்ய முடியாத சூழ்நிலை உருவானது. இதனால் ஆத்திரமடைந்த மிஸ்ரா குடியிருப்பில் பூங்கா பகுதியில் அமர்ந்திருந்த குடியிருப்பு செயலாளர் ஆர்.எஸ். யாதவிடம் சென்று முறையிட்டுள்ளார். அந்த கார் யாருடையது என கேட்டு யாதவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த கார் தன்னுடையது அல்ல என்றும் யாருடைய கார் என்பது குறித்து விசாரித்து அதை அங்கிருந்து எடுக்க சொல்வதாகவும் மிஸ்ராவிடம் குடியிருப்பு செயலாளர் கூறியுள்ளார்.
குடியிருப்பு செயலாளரின் பேச்சை ஏற்க மறுத்த மிஸ்ரா அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆர்.எஸ். யாதவின் மூக்கை மிஸ்ரா கடித்துள்ளார். இதில் காயமடைந்த யாதவ் அலறி துடித்துள்ளார். இதையடுத்து, அவரை குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.