பஹல்காம் உள்பட 3 முக்கிய விஷயங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் பல்வேறு முக்கிய பிரச்சினைகளை அவையில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளதை முன்னிட்டு, மத்திய அரசு சார்பில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன. கூட்டம் முடிந்த பிறகு, செய்தியாளர்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான கவுரவ் கோகாய் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
"பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தின் மூலம் நாட்டுக்கு இந்த முறை உரையாற்றுவார் என்பதில் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் மூன்று முக்கிய விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்துக்கு வந்து பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும். பஹல்காம் விவகாரத்தில் தெளிவான விளக்கமும், அமெரிக்க அதிபர் டிரம்பின் பேச்சுக்கான பதில்களையும் பிரதமரால் மட்டுமே அளிக்க முடியும்.
இரண்டாவதாக, வாக்களிக்கும் உரிமை குறித்து இன்று முக்கியமான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அரசியல் கட்சிகளுடன் பேசுவதைத் தேர்தல் ஆணையம் தவிர்க்கிறது. இவ்விவகாரத்தில், அரசாங்கத்தின் தலைவராக இருக்கும் மோடி, தனது அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அவையில் முன்வைப்பது அவரது கடமையாகும்.
மூன்றாவதாக, நமது மூத்த ராணுவ அதிகாரிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சினையை எழுப்பியுள்ளனர். சீனா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துடனான நமது எல்லையில் உருவாகியுள்ள புதிய நிலைமை பற்றியது. எனவே, பிரதமர் மோடி அவைக்கு வந்து இந்த மூன்று விவகாரங்கள் குறித்து தனது கருத்துகளை முன்வைப்பது மிகவும் முக்கியம்," என்றார்.