மணிப்பூரில் மீண்டும் வன்முறை; பாதுகாப்பு படையினர்-குக்கி மக்களிடையே மோதல்
மணிப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குக்கி மக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரிடையே மோதல் ஏற்பட்டது.;
இம்பால்,
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் குக்கி மற்றும் மெய்தி இன மக்களிடையே மோதல் வெடித்தது. தொடர்ந்து அங்கு நடந்த வன்முறை சம்பவங்களால் மிகப்பெரிய அளவிலான கலவரம் ஏற்பட்டது.
இந்த வன்முறையில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இதனிடையே மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இருப்பினும் அங்கு தொடர் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனிடையே மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுதப்பட்டது.
இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் இயல்புநிலை திரும்பும் சூழலை ஏற்படுத்தும் வகையில், இன்று முதல் மாநிலம் முழுவதும் சாலைகளில் தடுப்புகள் அமைக்காமல் சுதந்திரமான போக்குவரத்து அனுமதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று பேருந்துகள் இயங்க தொடங்கின.
இதனிடையே, குக்கி மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. குறிப்பாக காங்போக்பி மற்றும் சேனாபதி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தடைகளை ஏற்படுத்தி போக்குவரத்தை நிறுத்த முயற்சித்தனர். குக்கி இன பெண்கள் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனி நிர்வாகம் கோரி குக்கி இன மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட குக்கி இன மக்கள் மீது பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தினர். அப்போது பாதுகாப்பு படையினர் மற்றும் குக்கி மக்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தி பேருந்துகளை பாதுகாப்பு படையினர் அனுப்பி வைத்தனர்.