'போர் என்பது பாலிவுட் திரைப்படம் போன்றது அல்ல' - முன்னாள் ராணுவ தளபதி மனோஜ் நரவனே
போர் அல்லது வன்முறையை நாம் கடைசி ஆயுதமாகவே கருத வேண்டும் என மனோஜ் நரவனே தெரிவித்துள்ளார்.;
Image Courtesy : PTI
புனே,
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம் தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகள் குறித்து முன்னாள் இந்திய ராணுவ தளபதி மனோஜ் நரவனே கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது;-
"எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களும், அங்குள்ள குழந்தைகளும் வெடிகுண்டு தாக்குதல்களை கண்டு அச்சமடைந்துள்ளனர். இரவு நேரங்களில் பாதுகாப்பான இடங்களைத் தேடி ஓட வேண்டிய நிலையில் உள்ளனர்.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே முடியாது. அதிர்ச்சிகரமான சம்பவங்களை பார்த்தவர்களுக்கு மனதளவில் பாதிப்பு(Post Traumatic Stress Disorder) ஏற்படும். கொடூரமான காட்சிகளை கண்டவர்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகும் வியர்த்து எழுந்திருப்பார்கள். அவர்களுக்கு மனநல சிகிச்சை தேவை.
போரில் ரசிப்பதற்கு எதுவும் இல்லை. அது பாலிவுட் திரைப்படம் போன்றது அல்ல. அது மிகவும் தீவிரமான விஷயம். போர் அல்லது வன்முறையை நாம் கடைசி ஆயுதமாகவே கருத வேண்டும். அதனால்தான் நமது பிரதமர் இது போருக்கான காலம் அல்ல என்று கூறினார்.
விவேகம் இல்லாத மக்கள் நம் மீது போரை திணித்தாலும் நாம் அது குறித்து ஆரவாரம் செய்யக்கூடாது. இருப்பினும், நாம் ஏன் முழுமையான போரை நடத்தவில்லை என்று சிலர் கேட்கிறார்கள். ஒரு ராணுவ வீரராக, எனக்கு உத்தரவு கிடைத்தால் நான் போருக்குச் செல்வேன். ஆனால் அது எனது முதல் தேர்வாக இருக்காது.
தேசிய பாதுகாப்பில் நாம் அனைவரும் சம பங்குதாரர்கள். நாடுகளுக்கு இடையே மட்டுமல்ல, நமக்குள்ளும், குடும்பங்களுக்கு இடையேயான வேறுபாடுகளை தீர்க்க முயற்சிக்க வேண்டும். மாநிலங்கள், பிராந்தியங்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையேயான வேறுபாடுகளை தீர்க்க முயற்சிக்க வேண்டும். வன்முறை எதற்கும் தீர்வாகாது."
இவ்வாறு மனோஜ் நரவனே தெரிவித்தார்.