புதிய துணை ஜனாதிபதி தேர்தல்: வாக்குப்பதிவு விறுவிறுப்பு - முதல் நபராக வாக்களித்த பிரதமர் மோடி

மராட்டிய கவர்னர் சிபி ராதாகிருஷணன், சுப்ரீம்கோர்ட்டின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி இடையே போட்டி நிலவுகிறது.;

Update:2025-09-09 03:44 IST

புதுடெல்லி,  

துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல் நலக்குறைவு காரணமாக பதவியை ராஜினாமா செய்வதாக அவர் ஜனாதிபதியிடம் விளக்கம் அளித்தார்.நாட்டின் 2-வது மிக உயர்ந்த அரசமைப்பு பதவியான துணை ஜனாதிபதி பதவியை நீண்ட நாட்களுக்கு காலியாக வைத்திருக்கக் கூடாது என்று சட்ட விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து பட்டியல் வெளியிட்டது. அதன்படி கடந்த மாதம் 7-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.இதையடுத்து பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்த மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி. பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணி சார்பில், தெலுங்கானாவை சேர்ந்த சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார்.

கடந்த மாதம் அவர்கள் இருவரும் துணை ஜனாதிபதி பதவிக்கு தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அதன் பிறகு அவர்கள் இருவரும் நாடாளுமன்ற இரு அவைகளின் எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு திரட்டினர். நேற்று அவர்கள் இருவரும் தங்களது இறுதிக்கட்ட ஆதரவு திரட்டலை நடத்தி முடித்தனர்.துணை ஜனாதிபதியை நாடாளுமன்ற இரு சபைகளின் எம்.பி.க்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்பார்கள். நாடாளுமன்ற மக்களவையில் ஒரு இடம் காலியாக இருப்பதால் மொத்தம் 542 எம்.பி.க்கள் உள்ளனர்.நாடாளுமன்ற மேல்சபையில் 5 எம்.பி.க்கள் இடங்கள் காலியாக உள்ளதால் 228 எம்.பி.க்கள் உள்ளனர். இது தவிர மேல்சபையில் 12 நியமன எம்.பி.க்கள் உள்ளனர்.

மொத்தம் 782 எம்.பி.க்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) வாக்களிக்க தகுதியானவர்களாக உள்ளனர். இந்த 782 எம்.பி.க்களில் 392 வாக்குகள் பெறும் வேட்பாளர் வெற்றி பெறுவார். தற்போது நாடாளுமன்ற இரு அவைகளிலும் பா.ஜ.க. கூட்டணிக்கு அதிக எம்.பி.க்கள் உள்ளனர்.

பா.ஜ.க. கூட்டணிக்கு இரு அவைகளிலும் மொத்தம் 422 எம்.பி.க்கள் பலம் உள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை பெறும் வகையில் எம்.பி.க்கள் பலம் இல்லை. எனவே இன்று நடக்கும் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் சி. பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.

இதற்கிடையே, துணை ஜனாதிபதி தேர்தலில் ரகசிய வாக்குசீட்டு முறை கடைப்பிடிக்கப்பட இருப்பதால், தற்போதைய எண்ணிக்கையை விட கூடுதல் வாக்குகளைப் பெற வேண்டும் என்பதில் இரு கூட்டணிகளும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 11 எம்.பி.க்களும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.இதனால் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் சி. பி. ராதாகிருஷ்ணனுக்கு 433 வாக்குகள் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர பிஜு ஜனதா தளத்தின் 7 எம்.பி.க்கள், பாரதீய ராஷ்டீரிய சமிதியின் 4 எம்.பி.க்கள் ஆதரவைப் பெற இரு கூட்டணிகளும் தீவிரமாக காய்களை நகர்த்தி வருகின்றன.

23 பேர் ஓட்டு யாருக்கு?

நாடாளுமன்றத்தில் சிறு கட்சிகளும், 3 சுயேட்சைகளும் உள்ளனர். அவர்கள் உள்பட 23 எம்.பி.க்களின் வாக்குகள் யாருக்கு கிடைக்கும் என்பது தெரியவில்லை. அந்த வாக்குகளும் சி. பி. ராதாகிருஷ்ணனுக்கு கிடைத்தால், அவர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் அறை எண் எப்-101 என்ற அரங்கில் வைத்து தேர்தல் நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

துணை ஜனாதிபதி தேர்தலை நடத்தும் அதிகாரியாக மேல்சபை செயலாளர் பி. சி. மோடி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஓட்டுப்பதிவை கண்காணிப்பார். ஓட்டு போடுவதற்காக அனைத்து கட்சிகளின் எம்.பி.க்களும் டெல்லிக்கு வருகை தந்துள்ளனர். இன்று மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும் உடனடியாக ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்