சுபான்ஷு சுக்லாவின் வருகைக்காக காத்திருக்கும் மனைவி காம்னா

விண்வெளியில் இருந்த காலத்தில் அவர் சரியான உணவை சாப்பிட்டு இருக்க முடியாது என்று மனைவி கூறினார்.;

Update:2025-07-17 10:32 IST

லக்னோ,

இந்தியாவை சேர்ந்த விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று திரும்பியுள்ளார். தற்போது மருத்துவப்பரிசோதனைக்காக அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். சில குறிப்பிட்ட பயிற்சிகளுக்கு பின்னர், அவர் தனது வீட்டுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது வருகையை எதிர்பார்த்து அவருடைய மனைவி டாக்டர் காம்னா, தனது 6 வயது மகன் கியாசுடன் ஹூஸ்டன் நகரில் உள்ளார்.

கணவரின் வருகை பற்றி காம்னா கூறுகையில், எனக்கு அவரை லக்னோவில் உள்ள மாண்டிசோரி பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் போதே தெரியும். பள்ளிப்படிப்பு வரை இருவரும் ஒன்றாகவே படித்தோம். அவர் என்ஜினீயரிங் படித்தார். நான் பல் மருத்துவம் படித்தேன். இருவீட்டாரின் சம்மதத்துடன் எங்களது திருமணம் 2009-ம் ஆண்டு நடந்தது.

எங்களுக்குள் நல்ல புரிதல் உள்ளது. விண்வெளியில் அவர் இருந்த 18 நாட்களும் எங்களுக்கு சற்று கடினமாகவே இருந்தது. ஆனால் அவர் தினமும் எங்களுடன் பேசும்போதும், அவரது சாதனையை நாட்டு மக்கள் பேசும்போதும் எங்கள் கவலை மறைந்துவிட்டது.விண்வெளியில் இருந்த காலத்தில் அவர் சரியான உணவை சாப்பிட்டு இருக்க முடியாது. எனவே அவர் வீடு திரும்பியதும் அவருக்கு பிடித்த உணவை சமைத்து கொடுப்பேன்.

அவரது விண்வெளி அனுபவம் பற்றியும், எங்களது அமைதியான வாழ்க்கை பற்றியும் நீண்ட நேரம் பேசுவோம். அவருக்கு பிடித்தவற்றை இப்போதே தயார் செய்து வருகிறேன். விண்வெளி நிலையத்துக்கு சென்று திரும்பிய அவரை மீண்டும் பார்ப்பது என்னை பொறுத்தவரை கொண்டாட்டமானது என்றார். இதனிடையே லக்னோ திரிவேணி நகரில் சுபான்ஷு சுக்லாவை வாழ்த்தி, அவரது வீட்டைச் சுற்றி சுபான்ஷுவின் புகைப்படம் கொண்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த ஊரே மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்