சுற்றுலா தலத்துக்கு சென்று வரும் போது வாலிபர்களை துரத்திய காட்டு யானை
காட்டு யானையை பார்த்ததும் அவர்கள் செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்றனர்.;
பாலக்காடு,
பாலக்காடு மாவட்டத்தில் நெல்லியாம்பதி சுற்றுலா தலம் உள்ளது. இங்கு அடர்ந்த வனப்பகுதி வழியாக சென்று இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வருகின்றனர். இந்த நிலையில் வடக்கஞ்சேரியை சேர்ந்த சுகுணன் (வயது 28), சுல்பிக்கர் (25) ஆகிய 2 பேர் நெல்லியாம்பதிக்கு சுற்றுலா வந்து விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது சாலையில் குட்டியுடன் காட்டு யானை நின்றிருந்தது. இதை பார்த்த உடனே அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி, செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்றனர். அந்த சமயத்தில் காட்டு யானை 2 பேரையும் துரத்தி தாக்க முயன்றது. உடனே அவர்கள் மோட்டார் சைக்கிளை கீழே போட்டு விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் குட்டியுடன் காட்டு யானை திரும்பி சென்றது. இதனால் 2 பேரும் தப்பினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.