2-வது திருமணம் செய்த 4 மாதத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
ரஞ்சிதா, அனந்தபுரத்தை சேர்ந்த சசிகுமார் என்பவரை 2-வதாக திருமணம் செய்துகொண்டார்.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா அனந்தபுரம் அருகே எடிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சிதா (வயது 28). இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சில ஆண்டுகளிலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
இதையடுத்து ரஞ்சிதா தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரஞ்சிதா, அனந்தபுரத்தை சேர்ந்த சசிகுமார் என்பவரை 2-வதாக திருமணம் செய்துகொண்டார். ஆனாலும் அவர்கள் இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக ரஞ்சிதா, எடிஹள்ளி கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்தார். நேற்று முன்தினம் ரஞ்சிதாவின் தாய் வெளியே சென்றிருந்தார். இதனால் ரஞ்சிதா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அந்த சமயத்தில் அவர் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மாலையில் ரஞ்சிதாவின் தாய் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர், ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது ரஞ்சிதா தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர் கதறி அழுதார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் அனந்தபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் பிணமாக கிடந்த ரஞ்சிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. 2-வது திருமணத்திலும் மகிழ்ச்சியாக இல்லாததால் ரஞ்சிதா தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.