காதலி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது... பேசுவதை தவிர்த்ததால் ஆத்திரம்

பேசுவதை தவிர்த்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர், காதலி வீடு புகுந்து பெட்ரோல் குண்டு வீசினார்.;

Update:2025-07-13 21:33 IST

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள அரசூர்பேட் பகுதியைச் சேர்ந்தவர் சகுந்தலா (வயது 63). அவரது மகன் ராஜா. மருமகள் இந்திரா. இத்தம்பதி இறந்து விட்டனர் இவர்களின் மகள் திவ்யதர்ஷினி, பாட்டி சகுந்தலாவுடன் வசித்து வருகிறார். திவ்யதர்ஷினி வில்லியனூர் தனியார் வணிக நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர், அதே பகுதியை சேர்ந்த ஷியாம் (22) என்பவரை காதலித்து வந்தார்.

காதலன் ஷியாமுக்கு மதுகுடிக்கும் பழக்கம் உண்டு. அடிக்கடி மது குடித்து விட்டு அநாகரீகமாக நடந்து கொண்டதால், காதலனிடம் திவ்யதர்ஷினி கடந்த சில மாதமாக பேசுவதை தவிர்த்து வந்தார். ஆனாலும் அவர், செல்லும் இடங்களில் எல்லாம் ஷியாம் சென்று தன்னிடம் பேசுமாறு வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர் பேசுவதை தவிர்த்தார். இதனால் ஷியாம் ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

இதனிடையே கடந்த 3 நாட்களாக திவ்யதர்ஷினி வீட்டின் மீது கற்களை வீசி ஷியாம் மிரட்டி வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு பீர் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி, திரி வைத்து வெடிகுண்டு தயார் செய்து பிரியதர்ஷினி வீட்டுக்கு சென்ற ஷியாம், தன்னிடம் பேசாமல் இருந்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதொடு, அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச்சென்றார். அப்போது பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் பதறி அடித்தபடி வெளியே ஓடிவந்தனர்.

இதில் வீட்டின் கதவு பகுதி தீ பற்றி எரிந்தது. அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து, பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிய ஷியாமை கைது செய்தார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்