ரெயில் பாதையில் மது போதையில் காரை ஓட்டிய இளம்பெண்; ஐதராபாத்தில் பரபரப்பு

ரெயில் பாதையில் காரை ஓட்டிய இளம்பெண்ணால், பெங்களூரு மற்றும் ஐதராபாத் இடையே ரெயில் சேவையில் தற்காலிக பாதிப்பு ஏற்பட்டது.;

Update:2025-06-26 13:03 IST

ஐதராபாத்,

தெலுங்கானாவின் சங்கர்பள்ளி பகுதியில் இருந்து ஐதராபாத் நோக்கி செல்லும் ரெயில்வே தண்டவாள பகுதியில் இளம்பெண் ஒருவர் காரை ஓட்டி சென்றுள்ளார். அவரை தடுத்து நிறுத்த ரெயில்வே ஊழியர்கள் முயன்றனர். சிறிது தூரம் அவரை விரட்டி சென்றனர். ஆனால், அவர்களால் அது முடியவில்லை.

இதனை பார்த்து பயந்து போன உள்ளூர்வாசிகள் கூச்சலிட்டனர். ஆனால், அதனையும் மீறி அவர் காரில் சென்று விட்டார். இறுதியாக ரெயில் பாதையில் இருந்து விலகி, அருகேயிருந்த மரங்களின் மீது மோதி கார் நின்றது. இதில், கார் ஜன்னலின் கண்ணாடிகள் உடைந்து சிதறின. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதன்பின்னர் உள்ளூர்வாசிகள் அந்த இளம் பெண்ணை பிடித்து காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். ரெயில்வே போலீசார் உடனடியாக அந்த பெண்ணை மீட்டு, காவலுக்கு எடுத்து சென்றனர். விசாரணையில் அவர் மதுபோதையில் இருந்ததும், அதனாலேயே அப்படி அவர் காரை ஓட்டி சென்றதும் தெரிய வந்தது.

நிலைமையை தீவிர கவனத்தில் எடுத்து கொண்ட ரெயில்வே பணியாளர்கள் உடனடியாக செயல்பட்டு, வந்து கொண்டிருந்த ரெயில்களை தடுத்து நிறுத்தினர். இதனால், பெங்களூரு மற்றும் ஐதராபாத் இடையே ரெயில் சேவையில் தற்காலிக பாதிப்பு ஏற்பட்டது.

சங்கர்பள்ளி போலீசார் அந்த இளம்பெண்ணை விகாராபாத் ரெயில்வே காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்