குளியல் அறையில் பிணமாக கிடந்த இளம்பெண்... தோழியிடம் விசாரணை
குளியல் அறையில் தண்ணீர் சூடேற்றும் எந்திரத்தில் கியாஸ் கசிவு ஏற்பட்டதாக தெரிவித்தார்.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ேபளூா் தாலுகா தேவலாபுரா கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகள் ரஞ்சிதா (வயது 27). இவர் பெங்களூருவில் விடுதியில் தங்கி தனியாா் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவரது தோழி ஒருவருக்கு சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா ஹாந்தி கிராமத்தில் திருமண நிச்சயதார்த்த விழா நடந்தது.
இதில் கலந்துகொள்வதற்காக ரஞ்சிதா தனது மற்றொரு தோழி ரேகா என்பவருடன் மூடிகெரேவுக்கு வந்திருந்தார். பின்னா் அவர்கள் மூடிகெரேயில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று தங்கும் விடுதியில் ரேகா முதலில் குளித்துவிட்டு வந்தார். அதன்பிறகு ரஞ்சிதா குளிக்க சென்றார். ஆனால் அவர் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த ரேகா, குளியல் அறையின் கதவை தட்டி உள்ளார். ஆனால் நீண்ட நேரம் தட்டியும் ரஞ்சிதா கதவை திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், விடுதி ஊழியர்களுக்கும், மூடிகெரே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள், குளியல் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது உள்ளே ரஞ்சிதா பிணமாக கிடந்தார். இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். ரஞ்சிதா எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக அவருடன் தங்கியிருந்த ரேகாவை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், குளியல் அறையில் தண்ணீர் சூடேற்றும் எந்திரத்தில் கியாஸ் கசிவு ஏற்பட்டதாக தெரிவித்தார். ஆனாலும் ரஞ்சிதாவின் சாவில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால் இதுகுறித்து போலீசார் மர்மசாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த தங்கும் விடுதி உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்ததும், வரி பாக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து மூடிகெரே போலீசார், விடுதி உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.