காதலனுடன் உல்லாசமாக இருந்ததை மறைக்க போலீசாரிடம் நாடகமாடிய இளம்பெண்
பின் தொடர்ந்து வந்த மர்ம ஆசாமி திடீரென கதவை பூட்டி கொண்டு தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.;
மும்பை,
மும்பை மாநகராட்சி ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் 13-ந்தேதி 30 வயது இளம்பெண் ஒருவர், மர்ம உறுப்பில் காயத்துடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி இளம்பெண்ணிடம் டாக்டர் கள் விசாரித்ததில் ஓடும் ரெயிலில் ஆசாமி ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். இதில் சம்பவத்தன்று பெண் பிரயாக்ராஜில் இருந்து மும்பைக்கு ரெயிலில் பொது பெட்டியில் பயணம் செய்து உள்ளார். அப்போது கழிவறைக்கு சென்றபோது பின் தொடர்ந்து வந்த மர்ம ஆசாமி திடீரென கதவை பூட்டி கொண்டு தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.
இருப்பினும் தனக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடும் என்பதால் இதுபற்றி போலீசில் புகார் அளிக்கவில்லை என அவர் கூறினார். இதுபற்றி ரெயில்வே போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, அப்பெண் அளித்த தகவலின்படி சம்பவம் நடந்த ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்தனர். இதில் கடந்த மாதம் 12-ந் தேதி இளம்பெண் தனது காதலனுடன் மும்பைக்கு ரெயிலில் பயணம் செய்ததும், பின்னர் அங்குள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து 2 பேரும் உல்லாசமாக இருந்ததும், இதில் பெண்ணின் மர்ம உறுப்பில் காயம் ஏற்பட்டுள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து காயத்துக்கு சிகிச்சை பெறுவதற்காக ஆஸ்பத்திரிக்கு வந்த பெண் தனது காதலனின் அடையாளத்தை மறைக்க போலீசாரிடம் ஓடும் ரெயிலில் மர்ம ஆசாமி தன்னை பலாத்காரம் செய்ததாக பொய் புகார் அளித்து நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது.
இதற்கிடையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை முடிந்து தனது சொந்த ஊருக்கு சென்று விட்டார். இதனை தொடர்ந்து ரெயில்வே போலீசார் வழக்கை முடித்து வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.