‘கப்பு முக்கியம் பிகிலு..’ - விசில் அடித்து சின்னத்தை அறிமுகப்படுத்திய விஜய்

அழுத்தம் கொடுத்து தன்னை அடிபணிய வைக்க முடியாது என்று விஜய் கூறினார்.;

Update:2026-01-25 16:58 IST

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. கடந்த சில நாட்களாக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் த.வெ.க. ஆலோசனை கூட்டங்கள் நடந்து வருகின்றன. அதேநேரத்தில், கடந்த டிசம்பர் 18-ந்தேதி ஈரோட்டில் நடந்த மக்கள் சந்திப்புக்கு பிறகு விஜய் பொது நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை.

இதற்கிடையில் ஜனநாயகன் பட விவகாரம், சி.பி.ஐ. விசாரணை என்று தன்னை சுற்றிய விஷயங்களில் விஜய் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார். இந்த நிலையில், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் த.வெ.க. செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக த.வெ.க.விற்கு ‘விசில்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்திருந்த நிலையில், இன்று கூட்டத்திற்கு வந்த த.வெ.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர், தங்கள் கழுத்தில் விசிலை அணிந்தபடி வந்திருந்தனர்.

இந்த கூட்டத்தில் பேசிய விஜய், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வை விமர்சித்து பேசியதோடு, த.வெ.க.வின் கொள்கை தலைவர்களில் ஒருவரான ராணி வேலு நாச்சியாரின் வரலாற்றை எடுத்துக் கூறி தொண்டர்களை ஊக்குவித்தார். மேலும் த.வெ.க.விற்கு நட்பு சக்திகள் உதவி செய்தாலும், செய்யாவிட்டாலும் தனித்து நின்று வெற்றி பெறுவோம் என்று கூறினார். அதோடு, அழுத்தம் கொடுத்து தன்னை அடிபணிய வைக்க முடியாது என்றும் விஜய் கூறினார்.

இதைத் தொடர்ந்து தங்கள் கட்சியின் ‘விசில்’ சின்னத்தை விஜய் அறிமுகப்படுத்தினார். தனது கையில் இருந்த விசிலை ஊதிய அவர், ‘பிகில்’ திரைப்படத்தில் வரும் ‘கப்பு முக்கியம் பிகிலு’ என்ற பிரபல வசனத்தை கூறி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து மேடையில் விஜய், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், என்.ஆனந்த் உள்ளிட்ட த.வெ.க. நிர்வாகிகள் அனைவரும் இணைந்து ‘விசில்’ சின்னத்தை அறிமுகப்படுத்தினர். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்