தவெகவிற்கு விசில் சின்னம்..செய்தியாளர்கள் கேள்விக்கு சீமான் கொடுத்த பதில்
தேர்தல் வந்தவுடன் பேசுவது கேவலமாக உள்ளது. அதிக பணம், இடம் கொடுப்பவர்களிடம் கூட்டணி வைக்கிறார்கள் என்று சீமான் விமர்சித்தார்.;
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாம்பரத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? அவர்கள் பெண்களுக்கு இலவச பஸ் என்றார்கள். இவர்கள் ஆண்களுக்கு இலவச பஸ் என்று அறிவித்துள்ளனர். இதெல்லாம் மாற்றத்தை ஏற்படுத்துமா?கடந்த முறை எடப்பாடி பழனிசாமி இருந்தார். இந்த முறை மு.க. ஸ்டாலின் உள்ளார். இதனால் ஆட்சி முறையில் மாற்றம் வருமா? ஊழல் இல்லாத நிர்வாகம் உருவாகுமா?
எனக்கும் எனது கோட்பாட்டுக்கும் யாருமே போட்டி இல்லை. அவர்கள் ஓட்டுக்கு காசு கொடுக்கிறார்கள். நாங்கள் வாக்கை விற்கக் கூடாது என்று சொல்லி வருகிறோம். மக்கள் மத்தியில் அறச்சீற்றம் இல்லை. சகிப்புத்தன்மை ஏற்பட்டு வருகிறது. மாறிமாறி கூட்டணி அமைப்பவர்களுக்கு சீட்டும் நோட்டும்தான் முக்கியம். அதுவே அவர்களின் கொள்கை.இப்போது இருக்கும் தி.மு.க. அமைச்சர்களில் 10-க்கும் மேற்பட்டவர்கள் அ.தி.மு.க.வினர் தான். தீமைக்கு மாற்று எப்படி தீமையாகும்? தி.மு.க.வுக்கு மாற்று எப்படி அ.தி.மு.க.வாக இருக்க முடியும்? தமிழகத்தில் கடன் வளர்ச்சியே அதிகமாக உள்ளது.
தேர்தல் வந்தவுடன் பேசுவது கேவலமாக உள்ளது. அதிக பணம், இடம் கொடுப்பவர்களிடம் கூட்டணி வைக்கிறார்கள். இது சரி அல்ல. ஒரு கட்சியுடன் சேர்ந்துதான் வெல்ல வேண்டும் என்றால், தனியாக கட்சி எதற்கு?திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு போட்டாரே? அப்படி என்றால் மதுவை ஒழிப்பவருடன் தானே கூட்டணி வைக்க வேண்டும். ஏன் அப்படி செய்யவில்லை?த.வெ.க.வுக்கு விசில் சின்னம் கிடைத்துள்ளது பற்றி கேட்கிறீர்கள். அவர் கேட்ட சின்னம் கிடைத்துள்ளதால், தம்பிக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.