சாராயம் குடித்த 7 பேரின் உடல்நிலை எப்படி உள்ளது? - மருத்துவமனை அறிக்கை

சாராயம் குடித்த 7 பேர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.;

Update:2024-07-10 15:49 IST

விக்கிரவாண்டி,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க. சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அரசியல் கட்சிகளின் தீவிர பிரசாரம் ஓய்ந்த நிலையில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

விறுவிறு வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் விக்கிரவாண்டி பகுதியில் சாராயம் குடித்த 7 பேர் வாந்தி, மயக்கம் காரணமாக முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் இருந்து சாராயம் வாங்கி வந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கஞ்சனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சாராயம் குடித்த 7 பேர் உடல்நலம் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் கஞ்சனூர் மதுரா பூரி குடிசை கிராமத்தில் 08.07.2024 அன்று புதுச்சேரி சாராயத்தை குடித்த 7 நபர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாக வரப்பெற்ற தகவலையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் அன்றே 7 நபர்களையும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

5 நபர்கள் சிகிச்சை முடிந்து இன்று (10.07.2024) அவரவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள இரண்டு நபர்களுக்கு தொடர் குடிப்பழக்கம் இருந்து வந்ததால், மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவர்களால் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இவர்கள் இருவரும் நலமாக உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்