வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த மூதாட்டியிடம் 10 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

ஸ்ரீவைகுண்டத்தில் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த மூதாட்டியிடம் 10 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.;

Update:2025-09-14 21:42 IST

கோப்புப்படம் 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மேல கோட்டைவாசல் தெருவைச் சேர்ந்தவர் வெள்ளைப்பாண்டி. தொழிலாளி. இவரது மனைவி செல்லத்தாய் (60 வயது). நேற்று முன்தினம் இரவு செல்லத்தாய் காற்றோட்டத்திற்காக வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அவரது கணவர் மற்றும் உறவினர்கள் வீட்டிற்குள் இருந்தனர்.

அப்போது அந்த வழியாக நடந்து வந்த மர்ம வாலிபர் ஒருவர் திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் செல்லத்தாய் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ‘திருடன்... திருடன்’ என கூச்சலிட்டவாறு அந்த வாலிபரை பின்தொடர்ந்து ஓடியுள்ளார். அவரது சத்தம் கேட்டு, வீட்டிலிருந்த உறவினர்களும் பின்தொடர்ந்து ஓடியுள்ளனர்.

ஆனால் தாலி சங்கிலியை பறித்த மர்ம வாலிபர் வேகமாக இருளில் ஓடி தப்பி விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது மர்மநபர் குறித்த அங்க அடையாளங்களை போலீசார் கேட்டு தெரிந்து கொண்டனர். தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம வாலிபரை வலைவீசி தேடிவருகின்றனர்.

வீட்டுவாசலில் நின்ற மூதாட்டியிடம் நகை வழிப்பறி செய்த சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்