தமிழகத்தில் 10 ஆயிரம் வேலைவாய்ப்புகள்; பெங்களூருவில் ஒப்பந்தம் கையெழுத்து - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
தமிழகத்தில் 10,000 உயர் மதிப்புள்ள வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“தமிழக அரசின் @Guidance_TN இன்று உலகளாவிய திறன் மையங்களை உருவாக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான @ANSRGlobal உடன் ஒரு மூலோபாய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 10,000 உயர் மதிப்புள்ள வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
பெங்களூருவில் உள்ள தலைசிறந்த உலகளாவிய திறன் மையங்களுடன் நடைபெற்ற வட்டமேசை விவாதத்தின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த மையங்களின் தலைவர்களில் பலர் தமிழகத்தை சேர்ந்தவர்கள், குறிப்பாக பெண்கள். அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
ANSR 200-க்கும் மேற்பட்ட உலகளாவிய திறன் மையங்களையும், வேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய நிறுவனங்களையும் உருவாக்க உதவியுள்ளது. நம்முடன் ஒப்பந்தம் செய்ய அவர்கள் எடுத்த முடிவு, தமிழ்நாட்டின் தொலைநோக்குப் பார்வையின் வலிமையையும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியால் ஏற்பட்ட நம்பிக்கையையும் காட்டுகிறது.
தமிழ்நாடு உலகின் மிகவும் துடிப்பான உலகளாவிய திறன் மையங்களின் இருப்பிடமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. தொழில்நுட்பம், வாகனம், BFSI, பொறியியல், விண்வெளி மற்றும் சில்லறை விற்பனை நிறுவனங்கள் அனைத்தும் நமது மாநிலத்தை தேர்ந்தெடுத்துள்ளன. அவர்கள் நமது திறமை, உள்கட்டமைப்பு மற்றும் கொள்கை தொடர்ச்சிக்காக தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள்.
உலகளாவிய திறன் மையங்கள் தொழில்களை மறுவடிவமைப்பு செய்கின்றன. அதே சமயம், இந்தியாவில் உலகளாவிய திறன் மையங்கள் துறையை தமிழ்நாடு மறுவடிவமைப்பு செய்யும்!”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.