34 நாட்களில் 100 தொகுதிகள், 10 ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றுப்பயணம்; எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரசாரம்

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பொங்கலுக்கு மீண்டும் ரூ.2,500, ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள், மகளிருக்கு ரூ.1,500 உரிமைத்தொகை போன்றவற்றை வாக்குறுதியாக தருகிறார்.;

Update:2025-08-21 05:43 IST

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம், தமிழகம் மீட்போம்' என்ற பிரசார பயணத்தை கடந்த மாதம் 7-ந்தேதி தொடங்கினார். அவர், தனது பயணத்தை மற்ற தலைவர்கள் போல் கார்-ஜீப் போன்ற வாகனங்களில் மேற்கொள்ளாமல் பச்சை நிறம் கொண்ட பஸ்சில் மேற்கொண்டு வருகிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாணியில் மக்களை சந்தித்து பேசுகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அதிகளவில் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பிரசார கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு மக்களை கவரும் வகையில் இருப்பதாகவும், அனல் பறப்பதாகவும் அ.தி.மு.க.வினர் கூறுகின்றனர்.

அதேபோல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பொங்கலுக்கு மீண்டும் ரூ.2,500, இலவச வேட்டி சேலை, ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள், மகளிருக்கு ரூ.1,500 உரிமைத்தொகை போன்றவற்றை வாக்குறுதியாக தருகிறார். மேலும் தி.மு.க. ஆட்சியின் குறைகளை பட்டியலிடுகிறார். எடப்பாடி பழனிசாமி, நேற்று முன்தினம் 34 நாளில் 100-வது சட்டசபை தொகுதி பிரசாரத்தை ஆற்காட்டில் மேற்கொண்டார். நேற்று 35-வது நாள். இதுவரை 10 ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் சென்று சுமார் 52 லட்சம் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி இருக்கிறார். மிக முக்கியமாக விவசாயிகள், வியாபாரிகள், நெசவாளர்கள், மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை 150-க்கும் மேற்பட்ட கலந்துரையாடல்கள் நிகழ்ச்சிகள் மூலம் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அவை நிவர்த்தி செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்