கடந்த ஆண்டில் 1,092 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது - கமிஷனர் அருண் தகவல்

காவல்துறையின் அதிரடி நடவடிக்கையால் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளதாக கமிஷனர் அருண் பெருமிதம் தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-09 00:58 IST

சென்னை,

சென்னை காவல்துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளின் பலனாக கொலை-கொள்ளை, திருட்டு குற்றங்கள் கடந்த ஆண்டு வெகுவாக குறைந்துள்ளதாக கமிஷனர் அருண் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் புள்ளி விவரங்களுடன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

* 2023-ம் ஆண்டு 105 கொலைகள், 2024-ம் ஆண்டு 105 கொலை சம்பவங்கள் அரங்கேறியது. 2025-ம் ஆண்டு கொலைகள் எண்ணிக்கை 93 ஆக குறைந்தது. ரவுடிகளின் கொட்டம் அடக்கப்பட்டு ரவுடியிசம் தொடர்பான கொலைகளும் குறைந்தன.

* 2023-ம் ஆண்டில் 325 வழிப்பறி வழக்குகள், 2024-ம் ஆண்டில் 256 வழிப்பறி வழக்குகள் பதிவாகி இருந்தது. 2025-ம் ஆண்டில் 180 வழிப்பறி வழக்குகள் மட்டுமே பதிவானது.

* 2023-ம் ஆண்டில் 424 செயின் மற்றும் செல்போன் பறிப்பு வழக்குகளும், 2024-ம் ஆண்டில் 310 செயின் மற்றும் செல்போன் பறிப்பு வழக்குகளும் பதிவாகியது. கடந்த ஆண்டு 206 வழக்குகளாக குறைந்துள்ளது.

* 2023- ம் ஆண்டில் 1,750 வாகன திருட்டு வழக்குகள், 2024-ம் ஆண்டில் 1,486 வாகன திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 2025 -ல் இந்த வழக்கு எண்ணிகை 1,092 ஆக குறைந்தது.

* 2023-ல் 714 பேர்கள் மீதும், 2024-ல் 1,302 பேர்கள் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. 2025-ல் 1,092 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

* பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையாக 2025-ம் ஆண்டு 66 போக்சோ வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நீதிமன்ற விசாரணை மூலம் கடும் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.

* சென்னை போலீஸ்துறையில் மத்திய குற்றப்பிரிவுபொருளாதாரக் குற்றங்கள், நில மோசடி, ஆவண மோசடி, சைபர் குற்றங்கள் மற்றும் பிற தீவிர குற்றச் செயல்களைக் கண்டறிந்து, புலனாய்வு செய்தல் மற்றும் குற்றங்களை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் கடந்த ஆண்டு பெறப்பட்ட புகார்கள் அடிப்படையில் 601 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

குற்றச் சம்பவங்களில் சுமார் ரூ.886 கோடியே 53 லட்சத்து 18 ஆயிரத்து 744 மதிப்புள்ள சொத்துகள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விழிப்புணர்வுடன் கூடிய நடவடிக்கைகளின் விளைவாக சுமார் ரூ.459 கோடியே 74 லட்சத்து 69 ஆயிரத்து 167 மதிப்புள்ள அசையாச் சொத்துகள் பாதிக்கப்பட்டவர்களிடம் உரிய முறையில் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

* கடந்த ஆண்டு மத்திய குற்றப்பிரிவின் சைபர் குற்றப்பிரிவு மற்றும் கிழக்கு, மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு மண்டலங்களின் இணை கமிஷனர்கள் மேற்பார்வையில் செயல்பட்டு வரும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்களில், ‘சைபர் கிரைம்' புகார் சார்ந்த வழக்குகளில் 177 எதிரிகள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இணைய வழி மூலமாக பல்வேறு சமூக வலைதள பதிவு மற்றும் தரவுகள் மூலம் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் சைபர் குற்றவாளிகளின் உரிய தொடர்புகளை கண்டறிந்து வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, மொத்தம் ரூ.34 கோடியே 74 லட்சத்து 48 ஆயிரத்து 243 மீட்கப்பட்டு 1,389 பாதிக்கப்பட்ட நபர்களின் வங்கி கணக்கில் மீண்டும் செலுத்தப்பட்டுள்ளது.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்